-
அரசு மருத்துவமனைகளின் மீதான நம்பிக்கை மக்களுக்கு கேள்விக்குறியாகி உள்ளது பரிசோதனைக்காகச் சென்ற 3 1/2 வயது குழந்தையின் உயிரிழப்பிற்கு பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் M.P. இரங்கல்
சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், தாடை வளர்ச்சி குறைபாடு காரணமாக மூன்றரை வயது ஆண் குழந்தை அனுமதிக்கப்பட்டு, எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனைக்காக சென்ற குழந்தை, திடீரென மரணமடைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைகின்றேன்.
கடந்த 15-ஆம் தேதி இளம் கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணத்தைத் தொடர்ந்து, தற்போது இக்குழந்தை வரையிலான மருத்துவர்களின் அலட்சிய சிகிச்சைகளால் ஏற்படும் உயிரிழப்புகளின் காரணமாக, மக்களுக்கு அரசு மருத்துவமனைகளின் மீதும் – மருத்துவர்களின் மீதுமுள்ள நம்பிக்கை கேள்விக்குறியாகி வருகின்றது.
தொடர்ந்து ஏற்படுகின்ற மருத்துவ அலட்சிய உயிரிழப்புகளுக்கு தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து, எதிர்வரும் காலங்களின் இதுபோன்ற இழப்புகள் ஏற்படாமல் இருக்க வழிவகை செய்யவேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதோடு, உரிய இழப்பீடும் வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். குழந்தையின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு என் சார்பிலும் – இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்.
வருத்தங்களுடன்,
டாக்டர் பாரிவேந்தர் M.P
பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி.