• இளம் கால்பந்து வீராங்கனை பிரியாவின் மறைவிற்கு பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் M.P அவர்கள் விடுத்திருக்கும் இரங்கல் செய்தி

    சென்னையில் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையினால் 17 வயதே நிரம்பிய இளம் கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை தருகிறது. காலில் ஏற்பட்ட சவ்வு பிரச்னையால் அனுமதிக்கப்பட்டவர் தவறான சிகிச்சையால் வலது காலை இழந்ததோடு, உயிரையும் இழந்திருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியைத் தருகின்றது.

    சிறுவயது முதலே கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வந்த நிலையில், சமீபத்தில் பிரியா மூட்டு வலியால் பாதிக்கப்பட்டு, சென்னை கொளத்தூர் அரசு மருத்துவமனையில் மூட்டு அறுவை சிகிச்சை செய்து கால் அகற்றப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை உயிர் இழந்திருப்பது மிகவும் துயரமான ஒன்றாகும்.

    மருத்துவத்துறையின் தவறான சிகிச்சையால் அநியாயமாக உயிரை இழந்திருக்கும் பிரியாவின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி  இழப்பீடு வழங்கவேண்டும். இதுபோன்ற தவறுகள் இனிமேலும் நடக்காமல் இருக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்துவதோடு, பிரியாவின் மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் – சக விளையாட்டு வீரர்களுக்கும் - நண்பர்களுக்கும் எனது சார்பிலும், இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டு, அவரின் ஆன்மா இறைவனடி நிழலில் இளைப்பாற இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

     

    வருத்தங்களுடன்,

    டாக்டர் பாரிவேந்தர் M.P

    பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி.