-
தமிழக மாநிலத்தை நவீனமயமாக்க தொலைநோக்குத் திட்டங்களுடன் கூடிய நிதிநிலை அறிக்கை தமிழக நிதிநிலை அறிக்கைக்கு - டாக்டர் பாரிவேந்தர் M.P அவர்கள் வரவேற்பு
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் 2022-2023-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை நிதி அமைச்சர் திரு. பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். கடந்த வருடம் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சியில் இடைக்கால பட்ஜெட்டை ஆகஸ்ட் 13ம் தேதி தாக்கல் செய்த நிலையில், இந்த நிதி ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் இன்று தாக்கல் செய்தார்.
இந்நிதி நிலை அறிக்கையில்,
- அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளின் கல்வி இடைநிற்றலை தடுக்கும் வகையில் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் எனவும், மேலும் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வரும் மாணவிகள் இந்த உதவித்தொகையையும் பெறலாம். இதன் மூலம் 5 லட்சம் மாணவிகள் பயன்பெறுவார்கள் என்பது வரவேற்கத்தக்கது.
- பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை, கணினி ஆய்வகங்களுடன் நவீனப்படுத்தப்பட ரூ.7000 கோடி நிதி ஒதுக்கீடு.
- மாணவ – மாணவிகளின் புத்தக வாசிப்பை ஊக்குவிக்க அனைத்து மாவட்டங்களிலும் ரூ.5.6 கோடியில் புத்தக கண்காட்சிகள் அமைக்கப்படும்.
- ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிதிலமடைந்த கோயில்களை புனரமைக்க ரூ.100 கோடியும், தர்காக்கள் – தேவாலயங்களை புனரமைக்க ரூ.12 கோடி நிதியும் ஒதுக்கீடு.
- இந்து சமய அறநிலையத்துறைக்கு மொத்தமாக ரூ.340.87 கோடி நிதி ஒதுக்கீடு
- முதற்கட்டமாக 149 சமத்துவபுரங்கள் சீரமைக்க ரூ.190 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- மகளிரின் வாழ்வாதார வளர்ச்சிக்காக சுயஉதவிக் குழுக்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும் எனவும், மேலும் சுயஉதவிக் குழுக்களுக்காகவும் – விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கவும் ரூ.4,130 கோடி நிதி ஒதுக்கீடு
- அனைத்து உயிர்களும் சமம் என்ற முறையில் வள்ளலார் பல்லுயிர் காப்பகம் திட்டத்தின் கீழ் ஆதரவற்ற – காயமடைந்த விலங்குகளை பாதுகாப்பதற்காக ரூ. 20 கோடி ஒதுக்கீடு செய்தது.
- சென்னை வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக முதற்கட்டமாக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
- மற்றும் ஆண்டுதோறும் இலக்கிய திருவிழாக்கள் – புதிதாக 7 வணிக நீதிமன்றங்கள் – இளைஞர்களின் நலன் மற்றும் விளையாட்டுத்துறைக்காக வடசென்னையில் புதிய விளையாட்டுத்திடல் மற்றும் ஒலிம்பிக் பதக்கம் பெற பயிற்சி அளிக்கும் வகையில், ‘தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப்பதக்கத் தேடல்’ போன்ற திட்டங்கள் வரவேற்கத்தக்க வகையில் இருக்கின்றன.
சிறப்பம்சமான பல்வேறு திட்டங்களுக்கிடையில் கல்விக்கடன் ரத்து பற்றிய அறிவிப்புகள் ஏதும் இல்லை என்ற சிறு ஏமாற்றத்தைத்தவிர தமிழக நிதிநிலை அறிக்கையை இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் வரவேற்கின்றேன்.
வாழ்த்துக்களுடன்,
டாக்டர் பாரிவேந்தர் M.P
பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி.