• இந்தியர் என்ற பெருமையுடன் ஒவ்வொருவரும் அர்ப்பணிப்பு உணர்வோடு கடமையாற்றுவோம் - ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து குடியரசு தின வாழ்த்து

  இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. இதில் பல்வேறு ஜாதி –மத – இன – மொழி வேறுபாடுகள் இருந்தாலும் நாம் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அசைக்க முடியாத ஒற்றுமை வேண்டும். இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்து கிடக்கும் நம் தேசத்தில் அந்திய சக்தியின் நிழல்கூட தொட அஞ்சும் அளவிற்கு பெரும் திருவிழாவாக ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழாவை மிகுந்த உற்சாகத்துடனும் ஒற்றுமையுடனும் கொண்டாடி வருகின்றோம்.

  தாய்த்திருநாட்டினை அந்நியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி, ஒவ்வொரு மனிதனும் சுதந்திர காற்றை சுவாசிக்கப் பாடுபட்ட தியாகிகளையும், தேசத் தலைவர்களையும் இந்த நன்நாளில் நாம் நினைவில் கொள்வதுடன், நாட்டிற்காக தன் இன்னுயிரைக் கொடுத்த தியாகிகளைப் போற்ற வேண்டும்.

  ஒற்றுமையையும், சுதந்திரத்தையும், இறையாண்மையையும் பேணிக் காத்திடவும், விவசாயம் – கல்வி - சுகாதாரம் - தொழில் வளர்ச்சி என அனைத்துத் துறைகளிலும் முழுமையான - நிறைவான வளர்ச்சி பெறவும், அனைத்து வேறுபாடுகளையும் மறந்து, ஒவ்வொரு இந்தியனும் அர்ப்பணிப்பு உணர்வோடு கடமையாற்றி நம் நாட்டினை முன்னேற்றப்பாதையில் அழைத்துச்செல்ல உறுதியேற்போம் எனக்கூறி, நாளை (26.01.2022) 73-வது குடியரசு தின விழாவினை கொண்டாடும்  அனைவருக்கும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

  வாழ்த்துக்களுடன்,

  ரவிபச்சமுத்து

  தலைவர்

  இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)