-
சென்னையில் மின் வினியோகப் பெட்டிகள் (பில்லர் பாக்ஸ்) புதிதாக பொருத்தப்பட இருக்கிறது. விரைந்து அவற்றை பொருத்தவேண்டும் டாக்டர் பாரிவேந்தர் M.P. கோரிக்கை
சென்னையில் சுமாராக 85 ஆயிரம் மின் வினியோகப் பெட்டிகள் உள்ளன. அதில் 90 சதவீதத்திற்கும் மேல், இரண்டு பக்கம் கதவுகள் உடைய, ‘ஓபன் டைப்’ வகை மின்வினியோகப் பெட்டிகள் ஆகும். அவைகள் பொருத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. இரும்பால் செய்யப்பட்ட அந்த பெட்டியின் இரு பக்கமும் கதவுகள் இருக்கின்றன. சமூக விரோதிகள் கதவுகளை உடைத்து திருடி சென்றதால், பல பெட்டிகள் கதவுகள் இல்லாமலும், சேதமடைந்தும் காணப்படுகின்றன.
இதனால் அவற்றில் முறைகேடாக ஒயரைச் செலுத்தி, மின்சாரமும் திருடப்படுகின்றது. மேலும் மின்சாரம் செல்லும் ஒயர்கள் வெளியில் தெரிவதால் மழையின்போது தண்ணீரில் மூழ்கி, மின் கசிவு ஏற்பட்டு விபத்துக்களும் நிகழ்கிறது. இதைத்தடுக்க, சமீப காலமாக நவீன மின்வினியோக பெட்டிகள் பொருத்தப்படுகின்றன. அதில் ஒரு பக்கம் மட்டும் கதவு இருக்கும் என்பதால் மின்வாரிய ஊழியர்கள் மட்டுமே திறக்க முடியும். அதுவும் இரும்பால் செய்யப்பட்டது என்றாலும் அதிக வெப்பம் ஏற்படாது.
தற்போது ஒரே கட்டமாக 20 ஆயிரம் மின் வினியோக பெட்டிகள் வாங்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது. அவை, சேதமடைந்த பெட்டிகளுக்கு மாற்றாகவும், புதிதாக அமைக்கப்படும் கேபிள் வழித்தடங்களிலும் பொருத்தப்பட உள்ளன. மழைக்காலம், வடகிழக்கு பருவ மழை தொடங்கிவிட்ட நிலையில் பில்லர் பாக்ஸ்களை உடனடியாக பொருத்தி மக்களுக்கு உயிர் உடமை சேதாரங்கள் ஏற்படாதவாறு தடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
அன்புடன்,
டாக்டர் பாரிவேந்தர் M.P
பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி.