• தமிழக அமைச்சர்கள் முல்லைப்பெரியாறு அணைப்பகுதியை ஆய்வு செய்ய செல்லவேண்டும் - டாக்டர் பாரிவேந்தர் M.P. வேண்டுகோள்

    கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி இடுக்கி மாவட்ட பகுதிகளுக்கு உபரி நீர் திறப்பிற்காக வருகை தந்த கேரள மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர், ரோஸி அகஸ்டின், வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் ஆகியோர் இரண்டு நாட்களாக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றத்தையும், நீர்மட்டத்தையும் பார்வையிட்டனர். அணையிலிருந்து உபரி நீர் செல்லும் கரையோரப் பகுதி மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள வண்டிப்பெரியாறு, உப்புத்தரா, மஞ்சுமலா உள்ளிட்ட 6 நிவாரண முகாம்களையும் அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

    மூன்றாவது நாளாக ஞாயிற்றுக் கிழமையும், கேரள அமைச்சர்கள் முல்லைப் பெரியாறு அணைப்பகுதிக்கு வந்து ஆய்வு செய்தனர். தமிழக அரசு சார்பாக முல்லை பெரியாறு அணையில், ஞாயிற்றுக்கிழமை தமிழக பொதுப்பணித்துறை மண்டல முதன்மை பொறியாளர் எம்.கிருஷ்ணன், தமிழக அரசு அதிகாரிகளோடு சென்று ஆய்வு செய்தார்.

    கேரளத்தைச் சேர்ந்த 3 அமைச்சர்கள், முல்லைப்பெரியாறு அணையில் தொடர்ந்து ஆய்வு செய்துவரும் நிலையில், தமிழக அரசு தரப்பிலிருந்து அமைச்சர்கள் யாரும் அணைக்கு வராததால், கம்பம் பள்ளத்தாக்கு மற்றும் 5 மாவட்ட விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். உடனடியாக தமிழக அமைச்சர்கள் முல்லைப் பெரியாறு அணைப்பகுதிக்கு அடிக்கடிச் சென்று ஆய்வு செய்யவேண்டும். முல்லைப் பெரியாறு தமிழக அரசின் முழு கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்பதை உறுதி செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.

    அன்புடன்,

    டாக்டா பாரிவேந்தர் M.P

    பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி