• "தமிழகத்தை முதன்மை மாநிலமாக கொண்டு வர வேண்டும் என்பதே எங்கள் அணியின் முதன்மையான நோக்கம்" - ஐஜேகே தலைவர் திரு. ரவி பச்சமுத்து அவர்கள் அறிக்கை

  தமிழக அரசியலில் இன்று நிலவும் தேக்க நிலையை மாற்றவும், லஞ்சம்- ஊழல் என்கிற சமூக நோயிலிருந்து மக்களைக் காக்கவும், மாற்றத்திற்கான முதன்மை அணியினைத் தொடங்கி இருக்கின்றோம். இந்த அணியில் தற்போது இந்திய ஜனநாயகக் கட்சியும் - அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியும் இடம்பெற்றுள்ளன. மேலும் பல முக்கிய கட்சிகளும் இந்த அணியில் இடம் பெற உள்ளன என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

  பாஜக தலைமையிலான கூட்டணியில் 2014 நாடாளுமன்றத் தேர்தலையும்,  2016 சட்டமன்றத் தேர்தலையும் சந்தித்தோம். திமுக தலைமையிலான கூட்டணியில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, பெரம்பலூர் தொகுதியில் வெற்றியும் பெற்றோம். நமக்கு கிடைக்கும் எம். பி, எம். எல். ஏ என்கிற பதவிகளை விட தமிழக மக்களின் முன்னேற்றம் என்பதனையே முதன்மையாகக் கருதுவதால், நாம் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி புதிய அணியினை உருவாக்கி உள்ளோம். வரும் சட்டமன்றத் தேர்தலில் இக் கூட்டணியின் பங்களிப்பு யாரும் எதிர்பாராத வகையில் வலிமையுடன் நிலைபெறும்.

  கல்வி, வேலை வாய்ப்பு, தொழில், போக்குவரத்து, மருத்துவம், நவீன தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தமிழகத்தை முதன்மை மாநிலமாக கொண்டுவர வேண்டும் என்பதுதான் எங்கள் அணியின் முதன்மையான நோக்கம். இந்த நோக்கத்துடன் ஒன்றுபட்டு ஓரணியில் சேர ஆர்வமுள்ள சில முக்கிய கட்சிகளும் இணைந்து வரும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளோம். தமிழக மக்கள் தேர்வு செய்ய நல்ல கூட்டணியாகவும், மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றிக்கூட்டணியாகவும் இக்கூட்டணி அமைய உள்ளது. எனவே, இந்திய ஜனநாயகக் கட்சியின் பொறுப்பாளர்களும் - உறுப்பினர்களும் - ஆதரவாளர்களும் நம்பிக்கையுடன் இத்தேர்தலில் பணியாற்ற தயாராகும்படி கேட்டுக் கொள்கின்றேன்.

   

  அன்புடன்,

  ரவிபச்சமுத்து

  தலைவர்

  இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)