• 2021–22 ஆம் ஆண்டிற்கான மத்திய நிதி நிலை அறிக்கை குறித்து - டாக்டர் பாரிவேந்தர் எம்.பி. அவர்கள் விடுத்திருக்கும் அறிக்கை

    2021–22 ஆம் ஆண்டிற்கான மத்திய நிதி நிலை அறிக்கை குறித்து

        - டாக்டர் பாரிவேந்தர் எம்.பி. அவர்கள் விடுத்திருக்கும் அறிக்கை -

    (அறிக்கை விவரம்)

    2021-22 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீத்தாராமன் அவர்கள் இன்று (01.02.2021) நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்துள்ளார். வழக்கமாக காகித வடிவிலான நிதிநிலை அறிக்கைகளே சமர்ப்பிக்கப்பட்டு வந்த நிலையில், டிஜிட்டல் முறையில் இந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காகித பயன்பாட்டினை குறைத்து, டிஜிட்டல் வடிவில் இந்நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால் முழுவடிவிலான நிதிநிலை அறிக்கையினை அனைத்து மக்களும் பதிவிறக்கம் செய்து - படித்து அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். நவீன தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி, நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்துள்ள மத்திய நிதி அமைச்சர் அவர்களுக்கு, என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

    இந்நிதிநிலை அறிக்கையில், கன்னியாகுமரி முதல் மும்பை வரை தொழில் வழித்தடம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தின் மேற்கு பகுதி மாவட்டங்கள் தொழில் வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கலாம்.

    தமிழகத்தில், 3500 கிலோமீட்டர் அளவிற்கு, தேசிய நெடுஞ்சாலைகளைப் புதியதாக அமைக்கவும் – ஏற்கனவே உள்ள தேசிய நெடுஞ்சாலைகளைச் செப்பனிடவும், ஒரு லட்சத்து மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை -  மெட்ரோ ரயில் திட்டங்கள் 118 கிலோமீட்டர் அளவிற்கு விரிவாக்கம் செய்ய, 63 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அளவிற்கான நிதி ஒதுக்கீடு என்பது, கடந்த ஓராண்டாக முடங்கிக்கிடக்கும் வேலைவாய்பிப்பினை மறு இயக்கம் செய்வதற்கு வாய்ப்பாக இருக்கும்.

    வரும் ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உயரும் என்கிற மத்திய நிதியமைச்சரின் கூற்று, வெறும் நம்பிக்கையாகவே இருந்துவிடாமல் அதனை செயல்வடிவத்திற்கு கொண்டுவருவதற்காக, முனைப்பான திட்டங்களை மக்களின் ஒத்துழைப்போடு மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.

    அன்புடன்,

    டாக்டர் பாரிவேந்தர் M.P.,

    பெரம்பலூர் நாடளுமன்றத் தொகுதி.