• மத்திய நிதிநிலை அறிக்கை (2021-22) - ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து அவர்கள் விடுத்திருக்கும் அறிக்கை

  மத்திய நிதிநிலை அறிக்கை (2021-22)

  -    ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து அவர்கள் விடுத்திருக்கும் அறிக்கை -

  மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீத்தாராமன் அவர்கள் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். குறிப்பாக, ஆறு தலைப்புகளில் இந்த நிதிநிலை அறிக்கையினைப் பிரித்து, அவைகள் ஒவ்வொன்றிற்கும் முக்கியத்துவம் வருமாறு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

  குறிப்பாக, விவசாயிகளின் வருவாயினை உயர்த்துகின்ற வகையில்,  சில திட்டங்களை அறிவித்துள்ளார்.  அதன்படி, நெல் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை தொடரும் என அறிவித்துள்ளதை மத்திய அரசு சட்டபூர்வமாக உறுதிப்படுத்தவேண்டும். நாடு முழுவதும் விவசாயப் பெருமக்களுக்கு உள்ள அச்சத்தினை போக்குகின்ற வகையில், மத்திய அரசு மேலும் பல செயல்திட்டங்களை கொண்டுவரவேண்டும்.

  மேலும், மின் விநியோகத்தில் புதிய நடைமுறைகள் கொண்டுவரப்படும் என மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். அதாவது, வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் மின்விநியோக நிறுவனத்திடமிருந்து மின்சாரம் பெறலாம் என கூறியுள்ளார். மின் விநியோகம் தனியார் மயமாக்கப்பட்டால், வாடிக்கையாளர்களுக்கு மின் கட்டணம் உயராமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பினை மத்திய அரசு ஏற்கவேண்டும். விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் மற்றும் குடிசை வீடுகளுக்கான இலவச மின்சாரம் ஆகியவை பாதிக்கப்படாத வகையில், புதிய மின் விநியோகத்திட்டம் அமையவேண்டும்.

   மத்திய அரசின் எதிர்கால நடவடிக்கைகள் என்ன என்பதை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில், மத்திய நிதியமைச்சரும் - பிரதமர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களும் நாடு முழுவதும் பல இடங்களில் மக்களிடம் உரையாற்றுவதன் வாயிலாக இத்திட்டங்களை விளக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில், இந்நிதிநிலை அறிக்கைகள் வெறும் சடங்கு – சம்பிரதாயமாகவே இருந்துவிடும் என தெரிவித்துக்கொள்கின்றேன்.

  அன்புடன்

  ரவிபச்சமுத்து

  தலைவர்

  இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)