• “சாதிவாரி இடஒதுக்கீட்டு முறைசமுதாயப் பிரிவினையை ஏற்படுத்தும்” - ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து அறிக்கை

    “சாதிவாரி இடஒதுக்கீட்டு முறை

  சமுதாயப் பிரிவினையை ஏற்படுத்தும்

   

  -    ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து அறிக்கை – 

                     

                                          (அறிக்கை விவரம்)

   _____________________________________

   

   

  தமிழகத்தில் இட ஒதுக்கீடு என்கிற பெயரில் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் தங்களின் சாதிக்கு குறிப்பிட்ட சதவிகித இட ஒதுக்கீடு வேண்டும் என்கிற கோரிக்கையினைத் தொடர்ந்து முன்வைக்கின்றனர். தமிழகத்தைப் பொருத்தவரை சுமார் 2400-க்கும் அதிகமான சாதிப்பிரிவுகள் உள்ளது. 

   இட ஒதுக்கீடு என்பது  பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 30 சதவிகிதமாகவும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 சதவிகிதமாகவும், பட்டியல் இனத்தவர்களுக்கு 18 சதவிகிதமாகவும், மலைவாழ் பழங்குடியினருக்கு ஒரு சதவிகிதமாகவும் நடைமுறையில் உள்ளது. 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக இட ஒதுக்கீடு இருக்கக்கூடாது என, உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைகளும் – தீர்ப்புகளும் உள்ள நிலையிலும், தமிழகத்தைப் பொருத்தவரை 69 சதவிகித இட ஒதுக்கீட்டு முறையினை பின்பற்றி வருகின்றோம்.  அரசியல் சட்டத்திருத்த பாதுகாப்பின் அடிப்படையில் இந்த 69 சதவிகித இடஒதுக்கீடு தொடர்கின்றது.

   

  இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் ராமதாஸ் அவர்கள் வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு வேண்டும் என கோரிக்கை வைப்பதுடன், வன்முறையின் மூலம் அதை வலியுறுத்தவும் செய்கிறார். அவரைப் பின்பற்றி, ஆரிய வைசிய செட்டியார்கள் சங்கமும் தங்கள் சமுதாயத்திற்கு 20 சதவிகித இடஒதுக்கீடு வேண்டுமென கேட்கின்றனர். இதுபோன்ற கோரிக்கைகளை பலரும் முன்வைத்தால், தமிழகத்தில் 60 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையினைக் கொண்டுள்ள பார்க்கவ குலத்தினரும், தங்களுக்கும் 20 சதவிகித இட ஒதுக்கீடு வேண்டும் என கேட்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

   மேலும், பல அரசியல் மற்றும் சமூக அமைப்புகளும்  அவரவர்கள் சாதிக்கு தனியாக இட ஒதுக்கீடு வேண்டுமென கோரிக்கை வைத்தால், இட ஒதுக்கீட்டின் அளவு 69 சதவிகிதத்திலிருந்து - 1000 சதவிகிதமாக உயர்ந்துவிடும்.

   இட ஒதுக்கீட்டின் நோக்கமே  சமூக பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்களுக்கு, தற்காலிக ஏற்பாடாக ஒரு ‘சலுகை’ வழங்கவேண்டும் என்பதாகத்தான் இருந்தது. இதைத்தான் அரசியல் நிர்ணய சபையில் விவாதித்தார்கள். ஆனால்  இப்பொழுது இட ஒதுக்கீடு என்பது, தங்களின் ‘உரிமை’ என்கிற அளவிற்கு முற்றியிருக்கிறது. இது நல்ல ஆரோக்கியமான சமுதாயத்தின் அறிகுறிகள் அல்ல.

   60 ஆண்டுகளுக்கும் மேலாக சாதிவாரி இட ஒதுக்கீட்டு முறையினை கடைபிடித்து வந்த நாம், படித்த - அறிவில் சிறந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டுமானால், தற்போதுள்ள இட ஒதுக்கீட்டு நடைமுறையினைக் கைவிட்டு, பொருளாதார மற்றும்  மதிப்பெண் தகுதியிலான இட ஒதுக்கீட்டு முறையினைக் கொண்டுவரவேண்டும். இல்லையெனில், தற்போதைய சாதிவாரி இடஒதுக்கீட்டு முறை, சமுதாயப் பிரிவினையைத்தான் ஏற்படுத்தும். எனவே, இதுபோன்ற விஷ விதைகளை விதைப்பதை விட்டுவிட்டு, சமூக ஒற்றுமையினைக் காக்கவும் - வளர்க்கவும் அனைவரும் முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

  அன்புடன்,

  ரவிபச்சமுத்து

  தலைவர்

  இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)