• சாதிவாரி கணக்கெடுப்பிற்கு உடனடியாக தனி ஆணையம் அமைக்கவேண்டும் தமிழக அரசுக்கு பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் வலியுறுத்தல்

  சாதிவாரி கணக்கெடுப்பிற்கு உடனடியாக தனி ஆணையம் அமைக்கவேண்டும்

  தமிழக அரசுக்கு பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர்

  டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் வலியுறுத்தல்

  கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் சாதி  அடிப்படையிலான இட ஒதுக்கீடு வழங்குவதில் தமிழகம் இந்தியாவிற்கே முன்மாதிரி மாநிலமாக விளங்கிவருகின்றது. மற்ற மாநிலங்களில் 50 சதவிகிதத்திற்கும் மிகாத வகையில் இட ஒதுக்கீட்டினை செயல்படுத்திவரும் நிலையில், தமிழகத்தில் மட்டும்தான் 69 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகின்றது. அரசியல் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில், இடஒதுக்கீட்டிற்கான பாதுகாப்பினை தமிழகம் பெற்றுள்ளது. இதன்மூலம் பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட – தாழ்த்தப்பட்ட – மலைவாழ் மற்றும் சிறுபான்மையினரின் கல்வி, வேலைவாய்ப்பிற்கும் - அவர்களின் முன்னேற்றத்திற்கும் இந்த இடஒதுக்கீட்டுச் சட்டம் முக்கியக் காரணமாக விளங்குகின்றது.

  இன்றைக்கு இருக்கும் தமிழ்நாடு, நிலப்பரப்பில் விரிந்து - பரந்து சென்னை மாகாணமாக விளங்கிய காலத்தில், 1921-ஆம் ஆண்டில் நீதிக்கட்சியின் ஆட்சியிலேயே இடஒதுக்கீட்டிற்கான விதை  ஊன்றப்பட்டது.  பின்னர் 1951-ஆம் ஆண்டு ஜவகர்லால் நேரு அவர்கள் பிரதமராக இருந்தபோது, அரசியல் சட்டத்தில் திருத்தம்  கொண்டுவரப்பட்டு இடஒதுக்கீட்டிற்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது.

  இதனையடுத்து,  1972-ஆம் ஆண்டில்  டாக்டர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த திமுக ஆட்சியில்,  பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு எத்தனை சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பது குறித்து ஆராய்வதற்காக நீதியரசர் ஏ.என்.சட்டநாதன் அவர்களின் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. அப்பரிந்துரையின்படி, 25 சதவிகிதம் இடஒதுக்கீடு என்று இருந்ததை மாற்றி, 31 சதவிகிதமாக உயர்த்தி ஆணை பிறப்பிக்கப்பட்டது.

  பின்னர்  1980-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் அவர்கள் முதலமைச்சராக இருந்த அஇஅதிமுக ஆட்சியில், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு  33 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக  உயர்த்தப்பட்டது.

  1989-ஆம் ஆண்டு, பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டிலேயே ‘மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்’  என 108 சாதிகளை ஒரு தனி தொகுப்பாகக்கொண்டு, அவர்களுக்கு  20 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.  பின்னர்  சிறுபான்மையின மக்களுக்கெனவும், பட்டியல் இன மக்களிலேயே அருந்ததியினத்தவர் எனவும்  உள் ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டன.

  இவைகள் அனைத்துமே 1931-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கீட்டின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 90 ஆண்டுகளாக இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறவில்லை. இதனால் அனைத்து பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் இடஒதுக்கீடு வழங்குவதில் முழுமையான புள்ளிவிவரங்கள் இல்லாமல் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுகின்றன. தற்போதைய சூழ்நிலையில், ஒவ்வொரு சாதிக்கெனவும் தனி ஒதுக்கீடு வழங்கவேண்டுமென்கின்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதனை நிறைவேற்ற வேண்டுமானால் சாதிவாரியான மக்கள் தொகை புள்ளி விவரங்கள்  இருந்தால் மட்டுமே அறிவியல் பூர்வமாக அதனை நிறைவேற்ற முடியும். தோராயக் கணக்கின் அடிப்படையில் சாதிவாரி இட ஒதுக்கீடு வழங்குவதென்பது மீண்டும் சமூக நீதியை மறுக்கின்ற  செயலாக மாறிவிடும்.  

  இந்நிலையில், தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், சாதிவாரி கணக்கெடுப்பிற்கு தனி ஆணையம் அமைக்கப்படும் என்று கூறியுள்ளதை வரவேற்கின்றோம். சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழ்நிலையில், தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிடுவதற்கு முன்பாகவே இந்த ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்பதனை கருத்தில்கொண்டு, சாதிவாரி கணக்கெடுப்பிற்கு தனி ஆணையத்தை உடனடியாக அமைத்து, சமூக நீதியினை காப்பாற்ற வேண்டுமென தமிழக அரசினை கேட்டுக்கொள்கின்றேன்.

  அன்புடன்,

  டாக்டர் பாரிவேந்தர், M.P.,

  பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி