• "வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி 8-ஆம் தேதி நடைபெற உள்ள 'பாரத் பந்த்' முழு அடைப்பை வெற்றி பெறச் செய்வோம்" - இந்திய ஜனநாயகக் கட்சியினருக்கு தலைவர் திரு.ரவிபச்சமுத்து அறிவுறுத்தல்

    "வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி 8-ஆம் தேதி  நடைபெற உள்ள  'பாரத் பந்த்' முழு அடைப்பை வெற்றி பெறச் செய்வோம்"

    இந்திய ஜனநாயகக் கட்சியினருக்கு தலைவர் திரு.ரவிபச்சமுத்து அறிவுறுத்தல்

    அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில், கடந்த  பத்து நாட்களாக, டெல்லிப் புறநகரின்  சாலைகளில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மாநில உரிமைகளைப் பறித்து, விவசாயிகளை கார்ப்பரேட்டுகளின் கொத்தடிமைகளாக்கும், வேளாண் விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை, மாநில அரசின் மானியம் ஆகியவற்றைப் பறிக்கும், நெல்கொள்முதல் நிலையங்களை மூட வைக்கும் இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறுவோம் என்றோ - அதன் பிறகு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றோ, மத்திய பா.ஜ.க. அரசு கொள்கையளவில் ஒப்புக்கொள்ள முன்வரவில்லை என்பது கடும் கண்டனத்திற்குரியது.

    ஹரியானா, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் எல்லாம் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று வருகிறார்கள். பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகளின் பிரதிநிதிகள் டெல்லி சென்று போராட்டத்திற்கு வாழ்த்துக் கூறி வருகிறார்கள்.

    நான்கு முறை அரசுடன் பேச்சுவார்த்தைக்குச் சம்மதித்தும் - இதுவரை மத்திய பா.ஜ.க அரசு எவ்வித நம்பிக்கைக்குரிய வார்த்தைகளையும் விவசாயிகளுக்குத் தெரிவிக்கவில்லை. பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று - அதன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தியும் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து, டிசம்பர் 8-ஆம் தேதி 'பாரத் பந்த்' அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள்.

    மூன்று வேளாண் சட்டங்களையும், மின்சாரத் திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெறுங்கள் என்று முன்வைக்கும் கோரிக்கை, முழுக்க முழுக்க நியாயமானது என்று, தொடர்ந்து இந்தச் சட்டங்களை எதிர்த்து வரும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் உறுதிபடக் கூறிவருகின்றார்கள்.

    விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் அனைத்துத் தரப்பு மக்களின் நலனைப் பாதுகாக்க, தமிழத்தில் இருந்து கிளம்பும் இந்த ஆதரவுக் குரல் - அறவழியில் போராடும் விவசாயிகளுக்கு எழுச்சிக் குரலாக - அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றத்  துணை நிற்கும் குரலாக இருக்கவேண்டும்!

    எனவே, இந்திய ஜனநாயகக் கட்சியின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், மகளிர் அணியினர், இளைஞர் அணியினர், தொழிலாளர் அணியினர் உட்பட அனைவரும் திமுக தலைமையிலான தோழமைக்கட்சியினருடன் இணைந்து, பாரத் பந்த்தினை வெற்றி பெறச் செய்திட  வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.