-
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினர்களாக அப்பகுதியைச் சேர்ந்த எம்.பி-க்கள் இரண்டு பேரை நியமிக்க வேண்டும் - மத்திய அரசுக்கு ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து வலியுறுத்தல்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினர்களாக
அப்பகுதியைச் சேர்ந்த எம்.பி-க்கள் இரண்டு பேரை நியமிக்க வேண்டும்
- மத்திய அரசுக்கு ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து வலியுறுத்தல் -
(செய்தி விவரம்)
மதுரை அருகே தோப்பூர் என்கிற பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை திறந்த மனதுடன் ஏற்கனவே வரவேற்றுள்ளோம். தமிழக மருத்துவ உலகின் மதிப்பு வாய்ந்த நிறுவனமாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையவேண்டும் எனவும் வாழ்த்தியிருந்தோம்.
1264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில், 750 படுக்கை வசதிகளுடன் அமையவுள்ள இந்த எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2008-ஆம் ஆண்டு இந்திய பிரதமர் மாண்புமிகு நரேந்திரமோடி அவர்கள் நேரில் வருகைதந்து அடிக்கல் நாட்டினார்.
எனினும், மருத்துவமனை கட்டப்படுவதற்கான பூர்வாங்க வேலைகள் எதுவும் இதுவரை தொடங்கப்படவில்லை. இதுகுறித்து, பல்வேறு கட்சிகளும் – அமைப்புகளும் மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்ததன் விளைவாக, தற்பொழுது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக்குழு உறுப்பினர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.எம்.கடோச் அவர்களின் தலைமையில், 14 பேர் கொண்ட உறுப்பினர்களை நியமித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதில் டாக்டர் சுப்பையா அவர்களின் நியமனம் மிகப்பெறும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இதனால் அவர் இம்மருத்துவமனையின் நிர்வாகக்குழு உறுப்பினராக செயல்படவேண்டுமா என்பதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.
அதேவேளையில், நாம் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்வது என்னவெனில், முழுக்க முழுக்க அரசு அதிகாரிகளைக் கொண்ட நிர்வாகக்குழு என்பது, அரசு அலுவலகம் போலவே செயல்படும். மக்களின் கோரிக்கைகள் – பிரச்சனைகள் - அவர்களின் தேவைகளை இக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவர, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இடம்பெருவது அவசியம். இதனைக் கருத்தில்கொண்டு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள பகுதியை உள்ளடக்கிய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் மற்றும் தென் தமிழகத்தைச் சார்ந்த மேலும் ஒரு மக்களவை உறுப்பினர் என இரண்டுபேரை இக்குழுவில் நியமிக்கவேண்டுமென்று மத்திய அரசினை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.
அன்புடன்,
ரவிபச்சமுத்து
தலைவர்
இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)