-
“பெரம்பலூர் தொகுதிக்குட்பட்ட 300 மாணவர்களுக்கு இக்கல்வியாண்டிலும் எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தில் இலவச பட்டப்படிப்பிற்கான இடங்கள் ஒதுக்கீடு” பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் அறிவிப்பு
பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரியோர்களே, தாய்மார்களே, சகோதர, சகோதரிகளே, இளைஞர்களே ! மாணவர்களே!
உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்
2019-ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் நான்கு லட்சத்து ஆறாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றிபெறச் செய்து, உங்கள் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக என்னை தேர்ந்தெடுத்தீர்கள். அதற்காக உங்களுக்கு மீண்டும் ஒருமுறை என் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.
2019 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களில் கலந்துகொண்டு, நம் தொகுதிக்கான தேவைகளையும், நீண்ட நாள் கோரிக்கைகளையும் மாட்சிமை பொருந்திய அந்த அவையில் பேசியுள்ளேன். இதே கோரிக்கைகளை மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களை, 18.03.2020 அன்று டெல்லியில் நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். மற்றும் அந்தந்த துறைசார்ந்த மத்திய அமைச்சர்களை சந்தித்தும் இக்கோரிக்கைகளை எடுத்துக்கூறி என் கடமையினை ஆற்றியிருக்கின்றேன்.
குறிப்பாக,
1. அரியலூர் – பெரம்பலூர் – துறையூர் – நாமக்கல் மார்க்கமாக ரயல்பாதை அமைப்பதற்கு, மத்திய ரயில்வே துறை அமைச்சர் உயர்திரு. பியூஸ்கோயல் அவர்களை நேரில் சந்தித்து, கோரிக்கை மனுவினை அளித்துள்ளேன்.
மேலும், இதே கோரிக்கையினை மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களையும் சந்தித்து, இந்த ரயில்பாதை திட்டத்தின் அவசியம் குறித்து விளக்கமாக எடுத்துக்கூறியிருக்கிறேன். அதன் பயனாக, முதற்கட்ட சர்வே பணியினை விரைவில் தொடங்கவுள்ளோம் என ரயில்வே துறை அமைச்சர் திரு.பியூஸ்கோயல் அவர்கள் எனக்கு கடிதம் மூலம் உறுதியளித்துள்ளார்.
2. மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களை, தலைமைச் செயலகத்தில் நேரில் சந்திந்து, பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கோரிக்கைகளை அவரிடம் கடிதம் வாயிலாக அளித்துள்ளேன்.
3. குறிப்பாக,
· குளித்தலை – மணப்பாறை ரயில்வே மேம்பாலம்,
· பஞ்சப்பட்டி ஏரிக்கு காவிரி உபரிநீரை கால்வாய் மூலம் கொண்டுவருதல்,
· லால்குடி மற்றும் குளித்தலையில் கேந்திர வித்யாலயா பள்ளிக்கூடங்களை அமைப்பது,
· துறையூர் மற்றும் பெரம்பலூர் பகுதிகளில் மிக அதிக அளவில் விளையும் சின்ன வெங்காயத்தினை, விவசாயிகள் இருப்புவைக்க குளிர்சாதன வசதியுடன் கூடிய கிடங்குகள் அமைத்தல் …
ஆகிய கோரிக்கைகளை கடிதத்தின் வாயிலாக மாண்புமிகு தமிழக முதல்வரிடம் அளித்து, வலியுறுத்தியுள்ளேன். இச்செய்திகளையெல்லாம், பத்திரிகைகள் வாயிலாகவும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.
தற்பொழுது, மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றினை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன்.
2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, என்னுடைய தனிப்பட்ட வாக்குறுதியாக ஒன்றை தெரிவித்திருந்தேன். “இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஆண்டு ஒன்றிற்கு, இத்தொகுதிக்குட்பட்ட 300 மாணவர்களுக்கு, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் இலவசமாக பட்டப்படிப்பு படிப்பதற்கு ஆவண செய்வேன்” என வாக்குறுதி அளித்திருந்தேன். அதன்படி, கடந்த ஆண்டு 300 மாணவர்கள் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டு, கட்டணமில்லா இலவசக் கல்வியினை பெற்றுவருகிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக, இவ்வாண்டும் 300 மாணவர்களுக்கு இலவச பட்டப்படிப்பு படிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என அறிவித்து, அதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் அனுப்பச்சொல்லியிருந்தோம். அதன் அடிப்படையில் 1084 மாணவர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தனர்.
அவர்களின் மதிப்பெண் அடிப்படையிலும், குடும்பச் சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டும், இந்த ஆண்டும் 300 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பொறியியல், விவசாயம், கலை-அறிவியல் உள்ளிட்ட பட்டப்படிப்புகளை படிப்பதற்கான வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பட்டியலை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் வெப்சைட்டில் வெளியிடப்படுவதோடு, சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கும் தனித்தனியே தகவல் அனுப்பப்படும்.
இவ்வறிவிப்பினை வெளியிட்ட பத்து நாட்களுக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பாடப்பிரிவுகளில் சேர்ந்துகொள்ளலாம்.
இவ்வாறு, பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியின் தேவைகளையும், என்னுடைய தனிப்பட்ட வாக்குறுதிகளையும் என்றும் நினைவில் கொண்டு, தொடர்ந்து செயல்படுவேன் என இத்தருணத்தில் தெரிவித்துகின்றேன்.