• “உடல் மறைந்தாலும் காற்றின் அலைவரிசையில் அவரின் கானக்குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்”- எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவிற்கு டாக்டர் பாரிவேந்தர் எம்.பி, அவர்கள் இரங்கல்

    ‘இயற்கை என்னும் இளையகன்னி’யோடு தமிழ்த்திரையுலகிற்கு வருகை தந்த  திரு. எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள், ‘ஆயிரம் நிலவே வா’ என அழைத்து, தமிழக ரசிக நெஞ்சங்களில் தனக்கென்று தனியானதொரு இடத்தினைப் பெற்றார்.   டி.எம்.சௌந்திரராஜன், கே.ஜே.யேசுதாஸ்  போன்ற மிகப்பெரும் ஆளுமைகள் கோலோச்சிக்கொண்டிருந்த தமிழ்த்திரையிசை உலகில், திரு.எஸ்.பி.பி. அவர்கள் தனது கொஞ்சும் குரலால் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கினார். 

    இசையமைப்பாளர் திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட திரு.எஸ்.பி.பி. அவர்கள், 1980-ஆம் ஆண்டிற்கு பின்னர், இசைஞானி இளையராஜா அவர்களின் இசையமைப்பில்  தனியொரு இசை சாம்ராஜ்யமே நடத்தினார். அவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் அவருக்காக நெஞ்சுருகி பிரார்த்தனை செய்தார்கள். பல லட்சம் ரசிகர்களின் இல்லங்களில் தானும்  ஒருவராக விளங்கினார் என்பதற்கு அதுவே சான்றாகும்.

    அரிதினும் அரிதாக பல நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் இசைக்கலைஞர்களில் ஒருவாராக  திரு.எஸ்.பி.பி. அவர்கள் விளங்கினார். அவரின் உடல் மறைந்தாலும், தமிழகம் எங்கும் காற்றின் அலைவரிசையில் அவரின் கானக்குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். அத்தகு சாகாவரம் பெற்ற அம்மாபெரும் கலைஞரின் மறைவிற்கு என் இதயமார்ந்த வருத்தத்தினையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.