-
12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்திடுக
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் கடந்த 2011ஆம் ஆண்டு, அப்போதைய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் ஆட்சியில் 16,549 பேர் பகுதிநேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். இதில், 58 வயது நிறைவடைந்து ஓய்வு பெற்றவர்கள் போக தற்போது சுமார் 12ஆயிரம் பேர் பணியில் உள்ளனர்.
அரசு நடுநிலை- உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, கணினி அறிவியல், தோட்டக்கலை, கட்டிடக்கலை ஆகிய பாடப்பிரிவுகளில் பயிற்றுநர்களாக இவர்கள் பணியாற்றுகின்றனர்.
இவர்களுக்கு மாத தொகுப்பூதியமாக ரூபாய் 5 ஆயிரம் வழங்கப்படும் என 2011 ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. எனினும், ஒன்பது ஆண்டுகள் பணிபுரிந்து வரும் நிலையிலும், தற்போதுவரை ரூபாய் 7,700 மட்டுமே தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால், இதேபோன்ற பகுதிநேர ஆசிரியர்கள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களில் ரூபாய் 10,000 முதல் 25 ஆயிரம் வரை ஊதியம் பெறுகின்றனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு, சட்டப்பேரவையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், "பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம்" என அறிவித்தார். ஆனால் இன்றுவரை அந்த அறிவிப்பு நிறைவேற்றப்படவில்லை.
இதனையெல்லாம் கருத்தில் கொண்டு, தற்போது பணிபுரியும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களையும் பணிநிரந்தரம் செய்து, அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு உள்ளிட்ட பணப் பலன்களையும் வழங்கி, அவர்களின் குடும்ப வாழ்வாதாரத்திற்கு நிரந்தர தீர்வுகாண வேண்டுமென தமிழக அரசினை கேட்டுக்கொள்கின்றேன்.