-
ஐஜேகே தலைவர் திரு.ரவிபச்சமுத்து அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவது குறித்து,- தலைமை அலுவலகம் அறிவிப்பு
2015–ஆம் ஆண்டு ‘இளையவேந்தர்’ திரு.ரவிபச்சமுத்து அவர்கள் இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது முதல், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15-ஆம் தேதி, அவரின் பிறந்த நாள் நிகழ்வுகள் கட்சியின் சார்பில் கொண்டாடப்பட்டு வருகின்றது. பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்குதல் - கொடியேற்றுதல் – பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகங்கள் வழங்குதல் - வழிபாட்டு தளங்களில் சிறப்பு பூசைகள் செய்தல் – ரத்ததானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இவ்வாண்டும் வரும் 15-ஆம் தேதி (15.07.2020) இளையவேந்தர் அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என, கட்சியின் மாநில – மாவட்ட – ஒன்றிய – நகர பொறுப்பாளர்கள் விருப்பம் தெரிவித்தனர். ஆனால், ’நாடு இன்றுள்ள சூழ்நிலையில் தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம்’ என தலைவர் இளையவேந்தர் ரவிபச்சமுத்து அவர்கள் மறுத்துவிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், “மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாக உள்ள இச்சூழ்நிலையில், அவர்களின் கவலைகளையும், அன்றாட பிரச்சனைகளையும் நான் நன்கு உணர்கின்றேன். எனவே, இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையில் என்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு என் மனம் ஒப்பவில்லை. இந்த கொடிய கொரோனாவின் கோரத் தாண்டவங்களிலிருந்து முதலில் மக்கள் விடுபடவேண்டும். அதற்குப் பிறகுதான் பிறந்தநாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் குறித்து நாம் சிந்திக்கமுடியும். எனவே, இவ்வாண்டு என் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை தவிர்க்குமாறு இந்திய ஜனநாயகக் கட்சியின் அனைத்து பொறுப்பாளர்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.” என கூறியுள்ளார்.
எனவே, தலைவர் இளையவேந்தர் அவர்களின் அறிவுரைப்படி, அவரின் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் எதுவும் இவ்வாண்டு நடைபெறாது என தலைமை அலுவலகம் சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.