• நெய்வேலி என்.எல்.சி அனல்மின் நிலையம் - விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு டாக்டர் பாரிவேந்தர் எம்.பி. இரங்கல்

    கடலூர் மாவட்டம் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் அனல் மின்நிலையம் செயல்பட்டு வருகின்றது. பொதுத்துறை நிறுவனமான இதில், ஒப்பந்தம் மற்றும் நிரந்தரத் தொழிலாளர்கள் என சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர். என்.எல்.சி 2-வது அனல்மின் நிலையத்திலுள்ள 5-வது யூனிட்டில் இன்று காலை திடீரென பாய்லர் வெடித்துள்ளது. பாய்லர் வெடித்ததால் தீ மளமளவெனப் பரவி, அப்பகுதி முழுவதும் எரிந்துள்ளது. அப்பொழுது, அங்கு பணியிலிருந்த தொழிலாளர்களில் ஆறு பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்விபத்தில், மேலும் பலர் சிக்கியிருக்கக்கூடும் எனவும், .அதுகுறித்த தகவல்கள் சேகரிக்கப்படுவதாகவும் என்.எல்.சி அனல்மின் நிலைய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இத்துயரச் சம்பவத்தில் உயிரிழந்த, ஆறு பேரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன். மேலும், இவ்விபத்தில் சிக்கி, பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்கள் விரையில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.

     நெய்வேலி என்.எல்.சி அனல்மின் நிலையத்தில், கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி பாய்லர் வெடித்ததால், ஐந்து பேர் உயிரிழந்த சம்பவத்தை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். இரண்டு மாதங்களுக்குள்ளாகவே மீண்டும் ஒரு விபத்து ஏற்படும் அளவிற்கு பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதையே இச்சம்பவம் வெளிப்படுத்துகின்றது. எனவே, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, நெய்வேலி அனல்மின் நிலையம் மற்றும் நெய்வேலி சுரங்கம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பகுதிகளையும் ஆய்வு செய்ய நிபுணர் குழுவினை அமைக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.