• சர் ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டிய தமிழக முதல்வர் அவர்களுக்கு டாக்டர் பாரிவேந்தர் எம்.பி., அவர்கள் நன்றி தெரிவித்து விடுத்துள்ள அறிக்கை

    ‘திராவிட இயக்க வைரத்தூண்’ என போற்றப்பட்டவரும், நீதிக்கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக விளங்கியவருமான

    சர் ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்களுக்கு திருச்சியில் மணிமண்டபம் அமைக்க வேண்டுமென 19.11.2018 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களை சந்தித்து மனு ஒன்றினை அளித்தேன். அதனை ஏற்றுக்கொண்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், 14.02.2019 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் சர் ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்களுக்கு திருச்சியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். 16.02.2019 அன்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை சென்னை தலைமைச்செயலகத்தில் நேரில் சந்தித்து  நன்றியினை தெரிவித்துக் கொண்டேன். 

    இதன் தொடர்ச்சியாக, நேற்று (16.06.2020) காணொளிக் காட்சி மூலம் திருச்சியில், சர்  ஏ.டி. பன்னீர்செல்வம்  அவர்களுக்கும், மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களுக்கும், பாரம்பரிய இசைத்துறையிலும் - நடிப்புத் துறையிலும் புகழ்பெற்று விளங்கிய எம்.கே. தியாகராஜபாகவதர் அவர்களுக்கும் மணிமண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டினார்.     இதற்காக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு என் சார்பிலும், உலகமெங்கும் வாழும் பார்க்கவ குல மக்களின் சார்பிலும் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.