• இந்திய ராணுவ வீரர்கள் 20 பேரின் குடும்பத்தினருக்கு - IJK தலைவர் திரு.ரவிபச்சமுத்து அவர்கள் இரங்கல்

    வட இந்திய எல்லைகளான திபெத் - லடாக் பகுதிகளில் அத்துமீறி நுழைவதும், இந்திய அரசுப் பணிகளுக்கு இடையூறு செய்வதும் சீன ராணுவத்தின் வாடிக்கையான வஞ்சகப் போக்குகளாகும். இதன் தொடர்ச்சியாகத்தான் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தால் செயற்கையான பதட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இப்பதட்டத்தினால் ஏற்பட்ட மோதலில், ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த கர்னல் சந்தோஷ்பாபு, தமிழகத்தின ராமநாதபுரத்தைச் சார்ந்த ராணுவ வீரர் பழனி உள்ளிட்ட  20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் திரு.பழனி அவர்களின் உடல் இன்று அவரின் சொந்த ஊரான ராமநாதபுரத்திற்கு கொண்டுவரப்பட உள்ளது.

    அரசு அறிவித்துள்ள ஊரடங்குச் சட்டம் அமலில் உள்ளதால் இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தமுடியவில்லை. எனினும் அவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை இந்த அறிக்கையின் வாயிலாக தெரிவித்துக்கொள்கின்றேன்.