• லடாக் எல்லையில் வீரமரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர் உள்ளிட்ட 20 ராணுவவீரர்களின் குடும்பத்தினருக்கு - டாக்டர் பாரிவேந்தர் எம்.பி., அவர்கள் இரங்கல்

    கடந்த மே மாதம் முதல் வாரத்தில் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, வான்கோங் ஏரி உட்பட இந்திய பகுதிகள் சிலவற்றில் சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்துள்ளனர். இதனை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர், மே மாதம் 9-ஆம் தேதி சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் லடாக் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்றபோது, இந்திய ராணுவ வீரர்களால் விரட்டி அடிக்கப்பட்டுள்ளது. இதனை மனதில் வைத்துக்கொண்டு, சீன ராணுவத்தினர் இந்திய எல்லைப்பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அடாவடி செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனையடுத்து, இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்பட்டதில், சீன ராணுவத்தினர் இந்திய எல்லையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். அவ்வாறு அவர்கள் திரும்பிச் செல்லும்போது, மீண்டும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனை எதிர்த்துநின்ற இந்திய ராணுவ வீரர்களை, சீன ராணுவத்தினர் கம்பிகளாலும், கற்களாலும் கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர்.  இதற்கு இந்திய ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். இம்மோதலில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கர்னல் சந்தோஷ் பாபு, ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி உட்பட 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். எல்லையில் இயற்கை இடர்பாடுகளையும், எதிரி நாடுகளால் ஏற்படும் எதிர்பாரா தாக்குதல்களையும் சந்தித்து, தேசத்திற்காக தங்களின் இன்னுயிரினை ஈந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு என் வீரவணக்கத்தினையும் - இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு, இத்தாக்குதலில் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்று வரும் இந்திய  ராணுவ வீரர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் பிரார்த்திக்கின்றேன்.