• “கொரோனா ஊரடங்கால் வருவாய் இழந்துள்ள புகைப்பட மற்றும் ஒளிப்பதிவு கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும்” -தமிழக அரசுக்கு டாக்டர் பாரிவேந்தர் எம்.பி., கோரிக்கை

    தமிழ்நாட்டில்  புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவு கலைஞர்கள் (Photographer and Videographer) சுமார் 2.5 லட்சம் பேர் உள்ளனர். கடந்த நான்கு மாதங்களாக கொரோனா ஊரடங்கை அரசு அறிவித்ததன் மூலம் திருமணம் மற்றும் பிறந்தநாள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் பெரிய அளவில் நடைபெறுவது இல்லை. சில சுபநிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் கூட, வீட்டிற்குள்ளாக குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்கின்ற நிகழ்வாகவே உள்ளது. இதனால் புகைப்பட கலைஞர்களையோ, வீடியோ ஒளிப்பதிவாளர்களையோ அழைப்பதில்லை. இதன் காரணமாக அவர்கள் தங்களின் வருவாயினை இழந்துள்ளனர். எனவே, தமிழக அரசு ஏற்கனவே அமைப்புசாரா தொழிலாளர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கியதைப்போல புகைப்படம் மற்றும் வீடியோ கலைஞர்களுக்கும் நிவாரணம் வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

    வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு நலவாரியம் உள்ளது. அதன் மூலம் அவர்களுக்கு பல சலுகைகளும் கிடைக்கின்றது. ஆனால் இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான அளவில் உள்ள ஒளிப்பதிவு மற்றும் புகைப்படக் கலைஞர்களுக்கான நல வாரியம் இதுவரை அமைக்கப்படவில்லை. எனவே, இவர்களுக்கு நலவாரியம் அமைத்துத்தருவதோடு, தொழில் நிமித்தமாக அரசுப் பேருந்துகள் மூலம் வெளியூர் செல்லும்பொழுது, அவர்களுக்கு  கட்டண சலுகை வழங்கும்படியும் தமிழக அரசினை கேட்டுக்கொள்கின்றேன்.