-
“வாழ்நாள் முழுவதும் மக்கள் பணியாற்றுவதில் முன்நின்று உழைத்தவர் திரு.ஜெ.அன்பழகன்” திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவிற்கு- IJK தலைவர் ரவிபச்சமுத்து இரங்கல்
கடந்த 2001-ஆம் ஆண்டு தியாகராயர் நகர் சட்டமன்ற உறுப்பினராகவும், 2011 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு, தன்னுடைய வாழ்நாள் முழுவதும் மக்கள் பணியாற்றுவதில் முன்நின்று உழைத்தவர் திரு.ஜெ.அன்பழகன் அவர்கள். தன்னுடைய 62-வது பிறந்த நாளான இன்றே அவர் மரணம் அடைந்திருப்பது மிகப்பெரும் சோகமாகும்.
கொரோனா நோய்த்தொற்று தமிழகம் முழுவதும் அசுரவேகத்தில் பரவிய நேரத்தில் சாதாரண – சாமானிய மக்களுக்கும் உதவும் பொருட்டு, தன் உயிரையும் துச்சமென நினைத்து மக்களுக்காக சேவையாற்றியவர் திரு.ஜெ.அன்பழகன்.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக-வின் மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து, கட்சித் தொண்டர்களின் இதயத்தில் சிறப்பானதொரு இடத்தினைப் பெற்றிருந்தார். மறைந்த தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் பாசத்திற்குரியவராகவும், தற்போது தி.மு.கழகத்தின் தலைவராக விளங்கும் உயர்திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் நம்பிக்கைக்குரிய தளபதியாகவும் விளங்கியவர் திரு.ஜெ.அன்பழகன் அவர்கள். அவரின் மறைவு தி.மு.கழகத்திற்கு மட்டுமல்லாமல், அதன் கூட்டணி கட்சி என்கிற முறையில் இந்திய ஜனநாயகக் கட்சிக்கும் பேரிழப்பாகும். எனவே திமுக அறிவித்துள்ள மூன்று நாள் துக்க நிகழ்வில் இந்திய ஜனநாயகக் கட்சியும் கலந்துகொள்கின்றது.
ஆறுதல் சொல்லமுடியாத அளவிற்கு மிகப்பெரும் இழப்பினை ஏற்படுத்தியிருக்கும் திரு.அன்பழகன் அவர்களின் மறைவால் வருத்தமுற்றிருக்கும் தி.மு.கழகத்தின் தலைவர்களுக்கும், அதன் தொண்டர்களுக்கும், திரு. ஜெ.அன்பழகன் அவர்களின் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தினையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.