• “இலவச மின்சாரத்தை ரத்துசெய்யும் நடவடிக்கையில் நேரடியாகவோ - மறைமுகமாகவோ ஈடுபடக்கூடாது”- மத்திய – மாநில அரசுகளுக்கு டாக்டர் பாரிவேந்தர் M.P., கோரிக்கை

    கடந்த 30 ஆண்டுகளாக பெற்றுவந்த இலவச மின்சார திட்டத்திற்கு இன்று ஆபத்து வந்துவிடுமோ என தமிழக விவசாயிகள் அச்சத்தின் பிடியில் உள்ளனர். காரணம், இதுவரை இலவசமாக பெற்றுவந்த மின்சாரத்திற்கு இனிமேல் கட்டணம் செலுத்தவேண்டிய நிலை ஏற்படும் என்பதுதான்.

    இலவச மின்சாரம் பெற்றுவரும் விவசாயிகளின் மின் இணைப்புகளுக்கு, மீட்டர் பொருத்தும் பணியில் தமிழ்நாடு மின்சார வாரியம் ஈடுபட்டுள்ளது.  “எந்த அளவிற்கு மின்சாரத்தை விவசாயிகள் பயன்படுத்துகின்றார்கள் என்பதை கணக்கிடத்தானே ஒழிய, இதை வைத்து மின்கட்டணம் வசூலிக்கப்படாது” என தமிழக மின்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

    எனினும், இந்த விளக்கத்தினை விவசாயிகள் ஏற்றுக்கொள்வதாக இல்லை. காரணம்:

    • மின் பயன்பாட்டினை கணக்கெடுப்பதாகக் கூறி, பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கு கட்டணம் விதிக்கின்ற முறையை பிற்காலத்தில் கொண்டுவருவார்கள்.
    • அந்தக் கட்டணத்தை மாநில அரசே வங்கிகள் மூலம் மின்வாரியத்திற்கு செலுத்திவிடும் என்று அறிவிப்பார்கள்.
    • இது ஒரு கட்டத்தில் இலவச மின்சாரத்தை ரத்து செய்வதற்கு வசதியை ஏற்படுத்தும் நடவடிக்கையாகவும்  அமைந்துவிடும்.

    எனவேதான், மின் மீட்டர்களை பொருத்தும் பணியையே விவசாயிகள் எதிர்க்கின்றார்கள்.

    ‘உதய் மின் திட்டத்தில் தமிழக அரசு இணையாது’ என மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் கடைசி வரை உறுதியுடன் இருந்தார். அவர் மறைவிற்குப் பின்னர் பொறுப்பேற்றுக்கொண்ட அஇஅதிமுக புதிய அரசு, உதய் மின்திட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டது. இதனால் வேறு வழியின்றி மத்திய அரசின் திட்டத்திற்கு அவர்கள் இணங்க வேண்டிய சூழ்நிலையும் உள்ளனர்.

    தமிழகத்தின் மிகப்பெறும் நெல் ஆதாரமாக விளங்கும் காவிரி டெல்டா மாவட்டங்களில் பல்வேறு பிரச்சனைகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றார்கள். குறிப்பாக, காவிரி நீர் பிரச்சனை – ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு திட்டங்களால் ஏற்படும் பிரச்சனை – பெட்ரோலிய மண்டலம் அமைக்கும் திட்டத்தால் ஏற்படும் பிரச்சனை ஆகியவற்றை காவிரி டெல்டா பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.

    இதோடு, இடுபொருட்களின் விலை உயர்வால் உற்பத்தி செலவு கூடுதலான நிலையிலும், அதற்கு ஈடாக விலை நிர்ணயம் செய்யப்படுவதில்லை. இதனால் வேளாண் தொழில் என்பது லாபகரமானதாக இல்லாமல், கௌரவத்திற்காக செய்யக்கூடிய தொழிலாக மாறிவிட்டது.

    இயற்கை பேரிடரால் நெல் – தென்னை – வாழை உள்ளிட்ட பயிர்களின் சேதாரம்,  அரசு  திட்டங்களினால் ஏற்படும் நெருக்கடிகள், போதிய விலையின்மை, விவசாய பணிகளுக்கான ஆட்கள் பற்றாக்குறை…,  இத்தனை சுமைகளுக்கிடையில் மின்சாரம் மட்டுமே இலவசமாக கிடைக்கிறது என்கிற ஒரே ஆறுதலில் விவசாயிகள் இருந்தனர். அந்த ஆறுதலுக்கும் ஆபத்து ஏற்படுகின்ற வகையில் சமீபத்திய நடவக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

    எனவே, விவசாயிகளின் அச்சத்தினையும், சந்தேகத்தினையும் போக்குகின்ற வகையில் மத்திய – மாநில அரசுகள் தெளிவான ஒரு விளக்கத்தினை அளித்து, எந்த வகையிலும் நேரடியாகவோ - மறைமுகமாகவோ இலவச மின்சார திட்டத்திற்கு ஆபத்து நேராவண்ணம் தெளிவான அறிவிப்பினை வெளியிடவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.