• தொழில்வணிக நிறுவனங்கள் முடங்கிக்கிடக்கும் சூழ்நிலையில் ‘டாஸ்மாக்’ கடைகளை திறப்பதா? -தமிழக அரசுக்கு டாக்டர் பாரிவேந்தர் எம்.பி., கண்டனம்

    கடந்த 40 நாட்களுக்கும் மேலாக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கட்டிடப் பணிகள், விவசாயம், ஆயுத்த ஆடை தயாரிப்புக் கூடங்கள், கல்வி நிலையங்கள், போக்குவரத்து என அனைத்தும் முடங்கிக் கிடக்கின்றன.

    கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றிக்கொள்ள விலகியிருத்தலும், தனித்திருத்தலுமே தீர்வு என உலக சுகாதார அமைப்பு மற்றும் பல்வேறு மருத்துவ நிபுணர்களும்  கூறியிருந்ததால் ஊரடங்கினை மத்திய – மாநில அரசுகள் அறிவித்திருந்தன. இதனை ஏற்று மக்களும் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். இதனால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பினால், தங்களின் அன்றாட வாழ்விற்கே அல்லல்படும் சூழ்நிலையில் லட்சக்கணக்கான குடும்பங்கள் உள்ளன.

    இந்நிலையில், மக்களின் சமூக – பொருளாதார நிலை எதனையும் கருத்தில் கொள்ளாமல், வரும் 07-ஆம் தேதி முதல்  டாஸ்மாக் கடைகளைத் திறப்பது  என தமிழக அரசு எடுத்துள்ள முடிவு பெரும் அதிர்ச்சியினை அளிக்கின்றது. இந்த ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் மூடியிருந்ததை பயன்படுத்தி, முழு மதுவிலக்கினை அரசு கொண்டுவர வேண்டும் என பலரும் விரும்பிய சூழ்நிலையில், அதற்கு நேர்மாறாக மதுக்கடைகளை தமிழக அரசு திறக்க முடிவெடுத்துள்ள செயல் மிகவும் கண்டனத்திற்குரியதாகும்.

    வருவாய் இழந்து குடும்பத்தை எப்படி நடத்துவது என திண்டாடும் தாய்மார்களின் கவலையை அரசு கண்டுகொள்ளவில்லை.  எவ்வளவு கடுமையாக அரசு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மது வாங்க வருபவர்கள் சமூக விலகலை கடைபிடிப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. இதனால் கொரோனா பரவல் மேலும் தீவிரமடைந்து, பல ஆயிரம்  பேர் பாதிக்கப்படுவார்கள்.

    எனவே தொழிற்சாலைகள்,  சிறு-குறு தொழிற்கூடங்கள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றை  போதிய பாதுகாப்புடன் மீண்டும் இயக்குவதற்கு பதிலாக, மக்களின் உடலையும் – மனதையும் கெடுத்து, சமூக சீர்குலைவிற்கு வழிவகுக்கும் மதுக்கடைகளை திறக்கும் அறிவிப்பினை உடனடியாக தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.