-
“மக்களின்முன்னேற்றத்திற்காக இந்திய ஜனநாயகக் கட்சி அயராது பாடுபடும்“ - கட்சியின் 11-ம் ஆண்டு துவக்க நாளில் டாக்டர் பாரிவேந்தர் M.P., வாழ்த்து
தன்னலமற்ற உண்மையான ஜனநாயகத்தை வழிநடத்தும் வகையில் முன்மாதிரியான கட்சியாக 2010-ம் ஆண்டு இதே நாளில் இந்திய ஜனநாயகக் கட்சி தோற்றுவிக்கப்பட்டது.
இந்திய ஜனநாயகக் கட்சி தொடங்கியதில் இருந்து, சட்டமன்றத் தேர்தல்கள், உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தல்கள் என, அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டு தனது ஜனநாயகக் கடமையினை சிறப்பாகவும், செம்மையாகவும் செய்து வருகின்றது.
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றதேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் தோழமை கொண்டு, பெரம்பலூர் மக்களவை உறுப்பினராக என்னை தேர்ந்தெடுத்து, எனது வெற்றிக்காக பாடுபட்ட தோழமைக்கட்சிகளுக்கும், பெரம்பலூர் தொகுதி வாக்காளர்களுக்கும் இந்த நேரத்தில் என்னுடைய நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
நாடாளுமன்றத்தேர்தலில், நான் அளித்த வாக்குறுதியின்படி, பெரம்பலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து, 300 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் இலவச கல்வி, தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு 100 டன் அரிசியினை நிவாரண உதவியாக வழங்கியிருக்கிறேன்.
பெரம்பலுர் மக்களவைத் தொகுதி மேம்பாட்டுக்காக நான் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து தொகுதி மேம்பாட்டு திட்டங்களை நிறைவேற்றவும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையிலுள்ள ரயில்பாதை அமைக்கும் திட்டத்தினை நிறைவேற்றவும் வலியுறுத்தியுள்ளேன். மேலும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போதும் பெரம்பலூர் தொகுதி மக்களின் கோரிக்கைகளை குறிப்பிட்டு பேசியுள்ளேன்.
இந்திய ஜனநாயகக் கட்சியின் அமைப்புகள் உள்ள அனைத்து பகுதிகளிலும், கட்சியின் நிர்வாகிகளும் – தொண்டர்களும் ஒருங்கிணைந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உங்களால் முடிந்த வகையில் உதவிகளைச் செய்யவேண்டும். இதுவே, இந்திய ஜனநாயகக் கட்சியின் தொடக்க நாளான இன்று கட்சிப் பொறுப்பாளர்களுக்கு நான் விடுக்கும் கோரிக்கையாகும்.