• ஐஜேகே 11-ம் ஆண்டு துவக்கவிழா- கட்சியினருக்கு IJK தலைவர் ரவி பச்சமுத்து வாழ்த்து

    இளைஞர்களுக்கு நேர்மையான, முன்மாதிரியான அரசியல் களத்தை அமைத்து கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு, நமது உத்தமத் தலைவர் அய்யா டாக்டர் பாரிவேந்தர் அவர்களால் 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்திய ஜனநாயகக் கட்சி, தற்போது 11-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது.

    கட்சி தொடங்கிய நாள்முதல் கட்சியின் வளர்ச்சிக்காகவும், மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட இந்திய ஜனநாயகக் கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் கட்சியின் தலைவர் என்ற முறையில் என்னுடைய நன்றியினையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

    கட்சி தொடங்கப்பட்ட நாளை சிறப்பிக்கும் வகையில், நிர்வாகிகளும் - தொண்டர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஊரடங்கால் வேலை வாய்ப்பை இழந்துள்ள ஏழை எளிய மக்களுக்கு, தங்களால் இயன்ற உதவிகளை செய்யும்படி கேட்டுக்கொள்கின்றேன்.

    ஒட்டுமொத்த இந்தியாவும் நெருக்கடியில் சிக்கியுள்ள இக்காலகட்டத்தில், நாம் மனமுவந்து அளிக்கும் சிறிய உதவிகள்கூட பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேருதவியாக இருக்கும். எனவே தாங்கள் தங்கள் பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் மற்றும் நமது கட்சியின் நிர்வாகிகளுடன், அரசு வகுத்துள்ள விதிமுறைகளை மீறாத வகையில் நிவாரண உதவிகளைச் செய்யவேண்டும். இவ்வாறு நீங்கள் செய்த நிவாரண பணிகளை புகைப்படம் அல்லது வீடியோ மூலம் பதிவு செய்து கட்சித் தலைமைக்கு அனுப்பவேண்டும். நீங்கள் அனுப்பும் இப்பதிவுகள் தொலைக்காட்சி செய்திகளிலும் – கட்சியின் இணையதளத்திலும் வெளியிடப்படும். என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.