-
மே 3-ஆம் தேதிக்குப் பிறகு அனைத்து நிறுவனங்களும் இயங்க அனுமதிக்க வேண்டும் . IJK தலைவர் ரவி பச்சமுத்து வேண்டுகோள்
2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ஏற்பட்ட வேலைவாய்ப்பு இழப்பைக் காட்டிலும், தற்போது அதிக இழப்பு ஏற்படும் என, Centre for Monitoring Indian Economy எனப்படும் இந்தியப் பொருளாதார ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வீட்டைவிட்டு வெளியே வருவோரை மட்டுமே கொரோனா வைரஸ் கொல்லும் என்ற நிலையில், பட்டினிக் கொடுமையானது வீடு தேடிச் சென்று ஏழை மக்களை வாட்டுகிறது. பசியின் கொடுமையால் சில தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலையும் ஏற்படுகின்றது.
இந்தியாவில், கடந்த பிப்ரவரி மாதம் 40 விழுக்காடாக இருந்த வேலைவாய்ப்பு விகிதம், ஊரடங்கின்போது 26 விழுக்காடாக குறைந்துவிட்டது. மேலும் இந்தியாவில் 14 கோடி பேர் வேலையிழந்துவிட்டதாக இந்தியப் பொருளாதார ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவால், உலகின் பெரும்பாலான நாடுகளில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் முடங்கியுள்ளதாகவும், உலகம் முழுவதும் 154 கோடி மாணவ, மாணவியரின் கல்வி பாதிக்கப்பட்டு, அவர்கள் கல்வியைத் தொடர இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்காக மக்கள் நெருக்கம் இல்லாத வகையில், வேலை நேரத்தை மூன்று, எட்டு மணி நேரங்களாக (3 x 8) பிரித்து, காய்கறிக் கடைகள் முதல், பெரு வணிக வளாகங்கள், சிறு - குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அனைத்தையும் 24 மணி நேரமும் இயங்க வைக்கலாம்.
24 மணி நேரமும் நிறுவனங்களை இயங்க வைத்தால், இரவு நேரத்தில்கூட தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டிய தேவை ஏற்படும் என்பதால், எந்த ஒரு தொழிலாளிக்கும் வேலை இழப்பு ஏற்படாது. மேலும் மக்கள் அவர்கள் விரும்பும் நேரத்தில், நள்ளிரவில் கூட பொருட்கள் வாங்கலாம் என்பதால் கூட்டம் கூடுவது தடுக்கப்படும்.
24 மணி நேரமும் தொழில்கள் இயங்கும்போது, இழந்த பொருளாதாரத்தை மீண்டும் கொண்டுவர வாய்ப்பு ஏற்படும். இதற்காக அதிக அளவு மின்சாரம் தேவைப்படும் என்பதால், மத்திய மாநில அரசுகள், மின் கட்டணம் மற்றும் வரிகள் ஆகியவற்றில் சலுகைகள் வழங்கவேண்டும்.
எனவே, ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே இருந்தால், இந்தியாவில் கொரோனா பாதிப்பைவிட பொருளாதார பாதிப்பு அதிக இழப்புகளை ஏற்படுத்தும் என்பதால், மே மாதம் 3-ம் தேதிக்குப் பிறகு, நிபந்தனைகளுடன் அனைத்து நிறுவனங்களும் இயங்க அனுமதி அளிக்கப்பட வேண்டும் என இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் மத்திய – மாநில அரசுகளை கேட்டுக்கொள்கின்றேன்.