கொரோனா தொற்றால் தமிழக மக்கள் இனிமேலும் பாதிக்கப்படக்கூடாது என்கிற நல்லெண்ணத்தின் அடிப்படையில், அவர்களுக்கான மருத்துவ சிகிச்சை மற்றும் நோய் தடுப்பு முறைகள் குறித்து ஆராயவும், வாழ்வாதாரம் இழந்து நிற்கும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு, அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் மூலம் நிவாரணம் வழங்குவது குறித்து வழிகாட்டவும் திமுக தலைமையிலான தோழமைக்கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று (15.04.2020) நடைபெறுவதாக இருந்தது.
இக்கூட்டம் எந்தவித அரசியல் நோக்கமும் இன்றி, அரசுக்கு மேலும் வலுவூட்டுகின்ற வகையில் சில ஆலோசனைகளை வழங்குவதற்காக நடத்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும், இக்கூட்டத்திற்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. தமிழகத்தின் பொறுப்பு மிக்க எதிர்க்கட்சிகளின் மக்கள் பணியை முடக்கும் நோக்கத்தில் தமிழக அரசு இக்கூட்டத்திற்கு தடை விதித்துள்ளதாகவே கருதுகின்றேன்.
அரசியல் கட்சிகளும் – தன்னார்வ அமைப்புகளும் நேரடியாக மக்களிடம் நிவாரணப் பொருட்களை வழங்கக்கூடாது என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. நீதிமன்றத்தின் கண்டனத்திலிருந்து தப்பிக்க, ‘முறையான அனுமதி பெற்று நிவாரணப் பொருட்களை வழங்கலாம்’ என நீதிமன்றத்தில் விளக்கமளித்தது. இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையில் தமிழக அரசின் செயல்பாடு ஏற்புடையதாக இல்லை.
எனவே, திமுக தோழமைக்கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு விதித்திருந்த தடையை திரும்பப் பெறவேண்டும் எனவும், அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் மூலம் எந்தவித நிபந்தனையும் இன்றி நிவாரணப் பொருட்கள் வழங்க அனுமதிக்க வேண்டும் எனவும் தமிழக அரசை கேட்டுக்கொள்கின்றேன்.
Powered by iPOT Technologies