• தரணி எங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் உடலாலும் – உள்ளத்தாலும் நலம் பெற வாழ்த்துகின்றேன் - டாக்டர் பாரிவேந்தர் எம்.பி., தமிழ் புத்தாண்டு வாழ்த்து

    கடந்த நான்கு மாதங்களாக உலக மக்கள் அனைவரும் கொரேனா உயிர்க்கொல்லி தாக்குதலால் அச்சத்தின் உச்சத்தில் முடங்கிக் கிடக்கின்றனர்.

    தொழிற்சாலைகள் இயங்காமலும், வர்த்தக நிறுவனங்கள் செயல்படாமலும், கட்டுமானத் தொழில்கள் நிறுத்தப்பட்டுள்ளதாலும் பல லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.

    பொருளாதார பாதிப்புகள் ஒரு பக்கம் என்றால், உயிர் வாழ்வதே கேள்விக்குறி என்கிற நிலையில், ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் மரணத்தை தழுவுகிறார்கள். உலகம் இதுவரை கண்டிராத பெரும் ஆபத்தை மனித குலம் சந்தித்துக் கொண்டிருக்கின்றது.. எனினும் அனைத்தையும் போராடி வெல்வோம் என்கிற நம்பிக்கையும் நம்மிடம் இருக்கிறது.

    இச்சூழலில் நாளை (14.04.2020) பிறக்க உள்ள தமிழ் புத்தாண்டு நல்லதொரு துவக்கத்தினை உருவாக்கட்டும் எனக்கூறி, தரணி எங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் உடலாலும் – உள்ளத்தாலும் நலம்பெற வேண்டும் என வாழ்த்துகின்றேன்.