-
அத்தியாவசிய பொருட்களைவாங்க வெளியே செல்பவர்களுக்கு உரிய அனுமதி வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கு IJK தலைவர் ரவி பச்சமுத்து கோரிக்கை
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கினை அமல்படுத்தியிருப்பதையும், மக்கள் தனித்திருக்க வேண்டும் என்பதற்காக காவல்துறையினர் சில கட்டுப்பாடுகளை விதித்திருப்பதையும் வரவேற்கின்றோம்
அதேவேளையில் ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்துவதில், நிர்வாக ரீதியாக சில குறைபாடுகள் உள்ளதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
காய்கறிகள், அரிசி, பருப்பு, மருந்து மாத்திரைகள், எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கவேண்டும் என்பதற்காக அரசு சில சலுகைகளை அறிவித்துள்ளது. அதனைப் பயன்படுத்திக்கொண்டு, அனைத்து சரக்கு வாகனங்களும் இயக்கப்படுகின்றன.
அத்தியாவசிய பொருட்களை சரக்கு வாகனங்களில் ஏற்றவும், அதனை கடைகள் அல்லது பெரிய அங்காடிகளில் கொண்டுபோய் இறக்கவும் ஆட்கள் தேவைப்படுகிறார்கள். இவர்கள் சென்றுவர எந்த அடையாள அட்டைகளும் வழங்கப்படுவதில்லை. அதேபோல், பொருட்களை வாங்குவதற்காக கடைகளுக்குச் செல்பவர்களுக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்படுவதில்லை. இதனால் உண்மையான குடும்ப உறுப்பினர்களும் காவல்துறையின் தண்டனைகளுக்கு ஆளாகின்றார்கள்.
கடையை திறந்து வைத்துவிட்டு, அங்கு பொருட்களை வாங்கச் செல்லும் பொதுமக்களை தண்டிப்பது என்ன வகையான நியாயம்? எனவே இதுபோன்ற நிர்வாக குளறுபடிகள் ஏற்படாதவாறு மாவட்ட அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிடவேண்டும்.
மேலும், வரும் 14-ம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என செய்திகள் வருகின்றன. அவ்வாறு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நலத்திட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசினை கேட்டுக்கொள்கின்றேன்.