• கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் - டாக்டர் பாரிவேந்தர் M.P., வலியுறுத்தல்

    உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்  தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் மருத்துவர்கள்,  செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு ஊதிய உயர்வைப்  போலவே, இரவு பகல் பாராமல் உழைக்கும்  108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். 

    மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இவர்களும்  முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்களான   முகக் கவசங்கள்,  கிருமி நாசினிகள், கையுறைகள்  ஆகியவைகளை, 108 ஆம்புலன்ஸ்  வாகன ஓட்டிகள் மற்றும் ஆம்புலன்சில் உடன் செல்லும் பணியாளர்களுக்கும்  வழங்க  வேண்டும்.

    சமுதாயக் கடமைகளை உணர்ந்து, மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு  நோயாளிகளை மருத்துவர்களிடமும், மருத்துவமனைகளுக்கும்  அழைத்துச் செல்லும் உன்னதமான பணியினை செய்து வரும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையில், அவர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டுமென  தமிழக அரசை கேட்டுக் கொள்கின்றேன்.