-
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் ஒரு கோடி நிதி ஒதுக்கீடு - டாக்டர் பாரிவேந்தர் M.P., அறிவிப்பு
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசும், மாநில அரசும் மிகத்தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக, 21 நாட்களுக்கு ஊரடங்கு சட்டம் மூலம் மக்களை தனிமைப் படுத்துதல் மூலமாகவே, கொரோனா வைரசின் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என பிரதமர் மாண்புமிகு நரேந்திரமோடி அவர்கள் எடுத்திருக்கும் முயற்சி வரவேற்கக்கூடிய ஒன்றாகும்.
தமிழக அரசைப் பொறுத்தவரையில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அவர்களுக்கு உதவும் பொருட்டு என்னுடைய பங்களிப்பாக, பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் ஒரு கோடியை ஒதுக்கியுள்ளேன். இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தகவல் தெரிவித்ததோடு, பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன். இந்த ஒரு கோடி ரூபாயில், பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்கு ரூபாய் 40 லட்சமும், குளித்தலை சட்டமன்றத் தொகுதிக்கு ரூபாய் 20 லட்சமும், லால்குடி, மண்ணச்சநல்லூர், துறையூர் மற்றும் முசிறி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு ரூபாய் 10 லட்சம் வீதமும் நிதி ஒதுக்கியுள்ளேன்.
இந்நிதியின் மூலம், கொரோனா வைரஸ் தடுப்பு உபகரணங்கள் – வெண்டிலேட்டர் – மாஸ்க் – கையுறை – சானிடைசர் மற்றும் தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை வாங்கிக்கொள்ள பயன்படுத்தலாம் என குறிப்பிட்டுள்ளேன்
பொதுமக்களும், மத்திய - மாநில அரசுகளின் அறிவுரைகளை அலட்சியப்படுத்தாமல், இந்த நோயின் தீவிரத்தன்மையை உணர்ந்து, தங்களைத் தனிமைப் படுத்தி, பாதுகாத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றேன்.