• கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிரதமரின் அறிவிப்பினை ஏற்று ‘மக்கள் ஊரடங்கை’ கடைபிடிப்போம் - பொதுமக்களுக்குடாக்டர் பாரிவேந்தர் M.P., வேண்டுகோள்

  மனித குலத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தவும், குணப்படுத்தவும் இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் உலக நாடுகள் அனைத்தும் பெரும் பீதியிலும், அச்சத்திலும் உறைந்து கிடக்கிறது. மக்கள் தங்கள் தினசரி வாழ்க்கையையே ஆயிரம் கேள்விகளுடன் தொடங்க வேண்டியுள்ளது. காரணம் கொரோனா வைரசிற்கு எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படாததேயாகும்.

  ‘உயிர்கொல்லியான இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஒரே வழி, மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது மட்டுமே. உலக சுகாதார நிறுவனமும், இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ள பல நாடுகளும் பரிந்துரைப்பது இதனைத்தான்.

  தொடுதல் மூலமும், தும்மல் – இருமல்  மூலமுமே  கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவரிடம் தொற்றுகிறது. எனவே மக்கள் நெருங்கிப் பழகுவதையும், பெருமளவில் ஒன்றுகூடுவதையும் தவிர்க்க வேண்டும் என பிரதமர் மாண்புமிகு

  நரேந்திர மோடி அவர்கள் கூறியுள்ளார்.

  நேற்று (19.03.2020) இரவு நாட்டு மக்களிடையே தொலைக்காட்சி வாயிலாக பேசிய பிரதமர் அவர்கள், வரும் 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையை ‘மக்கள் ஊரடங்காக’ கடைபிடிக்க வேண்டும் என கூறியுள்ளார். காலை 7.00 மணியிலிருந்து - இரவு 9.00 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியேறாமல், பொது இடங்களில் கூடாமல் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

  நாட்டு மக்கள் மீது கொண்ட நல்லெண்ணத்தின் அடிப்படையில், கொடுங் கொரோனாவை மருத்துவம் மூலம் எதிர்கொள்ள முடியாத இச்சூழ்நிலையில், இதுபோன்ற சுயபாதுகாப்பே தற்காப்பு நடவடிக்கை என பிரதமர் அறிவித்துள்ளார்.

  எனவே கொடுங்கொரோனாவிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள, வரும் ஞாயிற்றுக்கிழமை ‘மக்கள் ஊரடங்கை’ கடைபிடிக்க வேண்டும் என தமிழக மக்களை கேட்டுக்கொள்கின்றேன்.