• கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள தினக்கூலி தொழிலாளர்களின் குடும்ப அட்டைகளுக்கு கூடுதலாக உணவுப்பொருள்களை வழங்கவேண்டும் - தமிழக அரசுக்கு டாக்டர் பாரிவேந்தர் M.P., கோரிக்கை

    கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நோக்கத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் உள்ள வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிறுவனங்களை நம்பி பல லட்சம் பேர் மாத சம்பள அடிப்படையிலும், தினக்கூலி தொழிலாளர்களாகவும் உள்ளனர். இந் நிறுவனங்கள் அனைத்தும் இம்மாதம் 31-ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கவேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதால், இதை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நடைபாதை வியாபாரிகள் -  சிறு வணிகர்கள் – காய்கறி கடை வைத்திருப்போர் – விவசாய, கட்டிட கூலி வேலைக்கு செல்பவர்கள் என பலதரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழக கூட்டுறவு நியாய விலைக்கடைகளில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் அரிசி – சர்க்கரை – கோதுமை – துவரம்பருப்பு – பாமாயில் – மண்ணெண்ணெய் ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, குடும்ப அட்டை ஒன்றுக்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. மாத ஒதுக்கீட்டின் அடிப்படையில் சர்க்கரை – மண்ணெண்ணெய் உட்பட ஏனைய பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

    கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து மக்களை காப்பாற்றும் பொருட்டு அரசு அறிவித்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், தினக் கூலித்தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதனை கருத்தில் கொண்டு, குடும்ப அட்டைகளுக்கான உணவுப்பொருட்களை இரண்டு மடங்காக உயர்த்தி வழங்கவேண்டும் என தமிழக அரசினைக் கேட்டுக்கொள்கின்றேன்.