-
இன்று (15.03.2020) சென்னை அருகே மறைமலைநகரில் இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது
சென்னை அருகே மறைமலைநகரில் உள்ள, ஆழ்வார் திருமண மண்டபத்தில் இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம், இன்று (15.03.2020) ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் நடைபெற்றது.
இப்பொதுக்குழுவிற்கு கட்சியின் தலைவர் உயர்திரு. ரவிபச்சமுத்து அவர்கள் தலைமை தாங்கினார். கட்சியின் பொருளாளர் திரு.ஜி.ராஜன், பொதுச்செயலாளர் திரு.பி.ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஐஜேகே நிறுவனரும், பெரம்பலூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான அய்யா டாக்டர் பாரிவேந்தர் அவர்கள், இப்பொதுக்குழுவிற்கு சிறப்பு அழைப்பாளராக வருகை தந்து உரையாற்றினார்.
இப்பொதுக்குழுவில், தற்போதைய அரசியல் சூழ்நிலை – மிக விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு மற்றும் உறுப்பினர்கள் சேர்த்தல் – கிளைகள் அமைத்தல் ஆகிய பொருள்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. இப்பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் பின்வருமாறு:
பேராசிரியர் க.அன்பழகன் மறைவு – இரங்கல்
திமுக பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள், திராவிட இயக்கத்தின் மிகப்பெரும் தலைவராக பணியாற்றியவர். தன்னுடைய மாணவப்பருவத்திலேயே தந்தை பெரியாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர். பின்னர், 1949-ல் பேரறிஞர் அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக்கழகத்தை தொடங்கியபோது, அக்கட்சியில் இணைந்து தன் இறுதி மூச்சுவரை, தி.மு.க விலேயே பணியாற்றிய பெருமைக்குரியவர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள். நிலைத்த புகழுடன் நிறைவான வாழ்க்கையினை வாழ்ந்த பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் மறைவிற்கு, இப்பொதுக்குழு தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.
டாக்டர் பாரிவேந்தர் எம்.பி-யாக தேர்வு – பாராட்டு
அரசியலில் நேர்மை – பொதுவாழ்வில் தூய்மை – லஞ்ச ஊழலற்ற வெளிப்படையான ஆட்சி என்கிற கொள்கை முழக்கங்களுடன், இந்திய ஜனநாயகக் கட்சியினை நிறுவிய நமது உத்தமத் தலைவர் அய்யா டாக்டர் பாரிவேந்தர் அவர்கள், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டார். சுமார் நான்கு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தனித்த செல்வாக்குடன் வெற்றிவாகை சூடிய, நமது கட்சியின் நிறுவனர் அய்யா டாக்டர் பாரிவேந்தர் அவர்களுக்கு, இப்பொதுக்குழு தனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றது. மேலும், பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அய்யா அவர்களின் வெற்றிக்கு தேர்தல் பணியாற்றிய, நமது கட்சித்தோழர்கள் - மகளிரணியைச் சார்ந்தவர்கள் – இளைஞரணி - மாணவரணி உள்ளிட்ட அனைவருக்கும் இப்பொதுக்குழு தனது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றது.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் – முதல்வருக்கு நன்றி
தஞ்சை – திருவாரூர் – நாகை – புதுக்கோட்டை – கடலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி, வேளாண் பாதுகாப்பு மண்டலத்தினை ஏற்படுத்தி, அதற்கு சட்டப்பூர்வமான அந்தஸ்தினையும் வழங்கி, விவசாயப் பெருமக்களுக்கு பாதுகாப்பினை வழங்கியிருக்கின்ற தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு, இப்பொதுக்குழு நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றது.
நதிகள் இணைப்பு
தமிழகத்திற்குள் பாயும் ஆறுகளை கால்வாய்கள் மூலம் ஒன்றிணைத்து மழைக்காலங்களில் வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை வறட்சிப் பகுதிகளுக்கு வழங்கவேண்டும் என்கிற நல்லெண்ணத்தின் அடிப்பைடயில் உருவானதே தமிழக நதிகள் இணைப்புத் திட்டமாகும். இத்திட்டத்தின்படி, தென்பெண்ணை ஆறு மற்றும் பாலாறு இணைப்புத் திட்டம், காவிரி அக்கினி ஆறு – தென்வெள்ளாறு – மணிமுத்தாறு – வைகை – குண்டாறு – வைப்பாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் திட்டம், தாமிரபரணி – கருமேனி ஆறு - நம்பியாறு இணைப்புத் திட்டம்,ஆகியவை முக்கியமான நதிநீர் இணைப்புத் திட்டங்களாகும். தமிழகத்தின் வடபகுதி முதல் தென் பகுதி வரை உள்ள அனைத்து நதிகளையும் ஒன்றிணைப்பதால், சுமார் 13 லட்சம் ஹெக்டேர் அளவிற்கு புதிய பாசனப் பகுதிகள் உருவாகும் என கண்டறியப்பட்டுள்ளது.
எனவே நீண்டகால பயன்தரும் மாநில நதிகள் இணைப்புத் திட்டத்தினை நிறைவேற்ற தமிழக அரசு ஆவணசெய்யவேண்டும். இதேபோல் வடக்கே கங்கை முதல், தெற்கே கிருஷ்ணா நதி வரை அனைத்து தேசிய நதிகளையும் ஒன்றிணைக்கவேண்டும் என மத்திய அரசினை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கின்றது.
சிறு-குறு தொழிற்சாலைகளுக்கான நிலுவைப்பணம்
சிறு-குறு தொழிற்சாலைகளுக்கு அரசு கொடுக்கவேண்டிய நிதியினை உடனடியாக வழங்கினால், சிறு-குறு தொழில்கள் மீண்டும் புத்துயிர் பெரும். இதனால் வேலைவாய்ப்பு நிரந்தரமாவதுடன், மேலும் பல இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கவும் வாய்ப்பு ஏற்படும். எனவே, தமிழக அரசு சிறு-குறு தொழிற்சாலைகளிடமிருந்து வாங்கிய உபகரணங்களுக்காக கொடுக்கவேண்டிய நிதியினை உடனடியாக வழங்கவேண்டும். இதேபோல், கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையினையும் தமிழகத்திலுள்ள கூட்டுறவு, பொதுத்துறை மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள் உடனடியாக வழங்கவேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கின்றது.
பெரம்பலூர் - ரயில்வே பாதை அமைப்பு
பெரம்பலூர் தொகுதியில் பெரும்பாலான மக்கள் விவசாயம் சார்ந்த தொழில்களையே செய்து வருகிறார்கள். சின்ன வெங்காயம், பருத்தி, மக்காச்சோளம், நெல், கரும்பு, எள், வாழை, மஞ்சள், முருங்கை மற்றும் வாசனை திரவியங்கள் தயாரிக்கக்கூடிய மலர்கள் என ஏராளமான விவசாயம் சார்ந்த பொருட்கள் விளையக்கூடிய பகுதியாகும். இங்கு விளையும் வேளாண் பொருட்களை அருகாமையில் உள்ள மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் எடுத்துச் செல்ல ரயில்பாதை எதுவும் இல்லை.
மேலும், இத்தொகுதியில் பெரிய அளவில் தொழிற்சாலைகளோ, தொழிற்பூங்காக்களோ அமைக்க வேண்டுமானால், அவற்றிற்கு ஏதுவாக ரயில் பாதை இன்றியமையாத ஒன்றாகும். இந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டம் நிறைவேற்றப்படாததால் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்பு கேள்விக் குறியாகி உள்ளது. எனவே, அரியலூர் - பெரம்பலூர் - துறையூர் மற்றும் நாமக்கல் ஆகிய வழித்தடங்களில், புதிய ரயில் பாதை அமைக்கவேண்டுமென மத்திய அரசினை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கின்றது.
குளித்தலை – பஞ்சப்பட்டி ஏரி
குளித்தலை சட்டமன்றத் தொகுதியிலுள்ள பஞ்சப்பட்டி ஏரி, தமிழகத்திலுள்ள பெரிய ஏரிகளில் ஒன்றாகும். இந்த ஏரியின் மூலம் 15 ஊராட்சிகளைச் சேர்ந்த சுமார் 35 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வறட்சி காலங்களில் இந்த ஏரிக்கு நீர் வரத்து இல்லாததால், 35 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும் வறண்டு போகின்றன. எனவே, வறட்சி காலங்களையும் சமாளிக்கின்ற வகையில், மாயனூர் தடுப்பணையிலிருந்து பஞ்சப்பட்டி ஏரிக்கு நீர் கொண்டுவர, விரைந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென, தமிழக அரசினை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கின்றது.