• காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல சட்ட மசோதாவிற்கு - டாக்டர் பாரிவேந்தர் M.P., வரவேற்பு

    காவிரி ஆற்றுப்பாசன படுகைக்கு உட்பட்ட தஞ்சை – நாகை – திருவாரூர்  ஆகிய மாவட்டங்கள் முழுவதாகவும், புதுக்கோட்டை – கடலூர் ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளை உள்ளடக்கியும், “பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல” மாக அறிவித்து, அதற்கான சட்ட மசோதாவினை, இன்று (20-02-2020) தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தாக்கல் செய்துள்ளார். கடந்த 2010 முதல், காவிரி டெல்டா பாசன மாவட்டங்களைச் சார்ந்த விவசாயப் பெருமக்களால்  தொடர்ந்து  வலியுறுத்தி வருகின்ற இக்கோரிக்கை இன்று சட்ட வடிவம் பெற்றுள்ளதை மனப்பூர்வமாக வரவேற்கின்றோம்.

    விவசாயம் என்பதே கைவிடப்பட்ட தொழில் என்கிற நிலைக்கு சென்றுகொண்டிருக்கும் இக்காலத்தில், இந்த அறிவிப்பும் - அதற்கான சட்ட நடவடிக்கைகளும் விவசாயத் துறையின் மீது, மேலும் நம்பிக்கையினை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.  அவ்வகையில், இதற்கான முன் முயற்சியினை மேற்கொண்ட தமிழக  முதல்வருக்கும், இதற்கு உறுதுணையாக இருந்து தக்க ஆலோசனைகளை வழங்கிய எதிர்க்கட்சித் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.