• டெல்டா - பாதுகாக்கப்பட்ட மண்டலம் - டாக்டர் பாரிவேந்தர் எம்.பி. வரவேற்பு

    இன்று (09.02.2020) சேலம் மாவட்டம் தலைவாசலில் நடைபெற்ற அரசு விழாவில், முதலமைச்சர் திரு, எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசும் போது, “காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்” என கூறியுள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் தஞ்சை,திருவாரூர்,நாகை, திருச்சி,புதுக்கோட்டை, அரியலூர்,கரூர் உட்பட காவிரி பாசனப் பகுதிகளைச்சேர்ந்த விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை  நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இனிமேல், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட வேளாண்சாராத திட்டங்கள் எதுவும் இப்பகுதிகளில் செயல்படுத்த முடியாது.

    சுமார் 18 லட்சம் ஏக்கர் அளவிற்கு பரந்து விரிந்துள்ள காவிரி பாசனப் பகுதிகளில் ஏற்கனவே 219 எண்ணெய் கிணறுகளை ஓஎன்ஜிசி நிறுவனம் நடத்திவருகிறது. மேலும், மரக்காணம் முதல் ராமநாதபுரம் வரை சில தனியார் கம்பெனிகளுக்கும், இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்காக மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. அதனை எதிர்த்து மாபெரும் போராட்டங்கள்  நடத்தப்பட்டதால், அத் திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    எனினும், கடந்த மாதம் மத்திய அரசு புதியதாக ஒரு அரசாணை வெளியிட்டிருந்தது. அதில், ஹைட்ரோகார்பன் மற்றும் இயற்கை எரிவாயு எடுப்பது உள்ளிட்ட திட்டங்களுக்கு மக்களின் கருத்துக்களை கேட்க வேண்டிய அவசியம் இல்லை என கூறப்பட்டிருந்தது.

    இந்த புதிய அறிவிப்பின்படி, காவிரி பாசனப் பகுதிகளில் மட்டும் சுமார் 5,000 சதுர கிலோமீட்டர் அளவிற்கு இத்திட்டங்களை நிறைவேற்றும் ஆபத்து இருந்தது. ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் மட்டுமல்லாமல், கடலூர், நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்கள் பெட்ரோலிய முதலீட்டு மண்டலங்களாகவும் அறிவிக்கப்பட்டிருந்தன.

    இதற்கு அனைத்து விவசாய அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கடும் கண்டனங்களை தெரிவித்ததோடு, எக்காரணம் கொண்டும் இத்திட்டங்களை செயல்படுத்த விடமாட்டோம் என்றும் அறிவித்தன. இந்த ஒரு சூழ்நிலையில் தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், காவிரி பாசனப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவித்துள்ளார். இதனை மனப்பூர்வமாக வரவேற்கின்றேன். இந்த அறிவிப்பினை, நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே சட்டமாக நிறைவேற்றி, தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் காவிரிப் பாசனப் பகுதிகளை பாதுகாக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.