• “பொருளாதார தேக்கநிலையைப் போலவேமத்திய பட்ஜெட்டும் தேக்கநிலையில் உள்ளது”“பொருளாதார தேக்கநிலையைப் போலவேமத்திய பட்ஜெட்டும் தேக்கநிலையில் உள்ளது” மத்திய நிதிநிலை அறிக்கை குறித்து டாக்டர் பாரிவேந்தர் எம்.பி. கருத்து

    2020-21 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீத்தாராமன் அவர்கள் இன்று (01.02.2020) நாடாளுமன்ற மக்களைவில் தாக்கல் செய்துள்ளார். மக்களின் பெரும் எதிர்பார்ப்பான வருமான வரிவிலக்கு குறித்த அறிவிப்பு இந்நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

    அதாவது, ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூபாய் 15 லட்சம் வரையிலான வருமானத்திற்கும் வரிவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இது மாத ஊதியம் பெறுவோர் மற்றும் நடுத்தர மக்களுக்கு ஆறுதலை அளிக்கக்கூடியதாக இருக்கும்.  ஜிஎஸ்டி நடவடிக்கைகளில் வர்த்தகர்களை அச்சுறுத்தும் நடைமுறைகள் இருக்காது என நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இதன்மூலம்  கோடிக்கணக்கான வணிகர்களுக்கு தணிக்கை நெருக்கடிகள் குறையும் என எதிர்பார்க்கலாம். 

    விவசாயத்துறையை ஊக்கப்படுத்த 16 அம்ச திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வகையில் சில புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், பால் – பழங்கள் – காய்கறிகள் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களை கொண்டு செல்ல ‘கிசான் ரயில்’ என்கிற பெயரில் தனியாக ரயில் விடப்படும் என்பது, விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு செல்லும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

    ஆதிச்சநல்லூரில் தொல்பொருள் அகழ்வாய்வு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்கிற அறிவிப்பினை வரவேற்கிறோம். இதேபோல், கீழடியில் அகழாய்வினை தொடர்ந்து நடத்த, போதிய நிதியினையும் – நிபுணர்களையும் வழங்க வேண்டும்.

    ஆயுள்காப்பீட்டு நிறுவனத்தின் (LIC) அரசு பங்குகளை தனியாருக்கு விற்பது என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.  ஏற்கனவே BSNL தொலைத்தொடர்பு நிறுவனம் மிகப்பெரும் நிதி நெருக்கடியினை சந்தித்து, அதில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கான பணியாளர்கள் விருப்ப ஓய்வில் அனுப்பப்பட்டுள்ளனர். இதனால் BSNL நிறுவனம் தொடர்ந்து இயங்குமா அல்லது மூடப்படுமா என்கிற கேள்விக்குறி மக்களிடையே எழுந்துள்ளது.

    இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனமும், தனியாருக்கு விற்கப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் ஆயுள்காப்பீட்டு நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் என்பதன் மூலம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், அரசின் கைகளைவிட்டு நழுவிச் செல்வதையே காட்டுகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்படும். எனவே, எல்.ஐ.சி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் முடிவினை மத்திய அரசு கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். மொத்தத்தில், பொருளாதார தேக்கநிலையைப்போலவே இந்த பட்ஜெட்டும் ஒரு தேக்க நிலையில் உள்ளதாகவே கருதுகின்றேன்.