-
5 மற்றும் 8 – ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவினைக் கைவிடவேண்டும் - தமிழக அரசுக்கு டாக்டர் பாரிவேந்தர் எம்.பி, கோரிக்கை
5 மற்றும் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இக்கல்வி ஆண்டு முதலே பொதுத்தேர்வினை நடத்துவதெனவும், இதற்கான பயிற்சி வகுப்புகள் உடனடியாக தொடங்கப்படும் எனவும், தமிழக கல்வித்துறை அமைச்சர் திரு.செங்கோட்டையன் அவர்கள் அறிவித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட, அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின் படி 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு மாத்திரமே நடத்தப்படும் எனவும், இதில், ‘தேர்ச்சி பெற்றவர்கள் – தேர்ச்சி பெறாதவர்கள்’ என யாரும் அறிவிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால் சமீபத்தில் வெளியிட்டப்பட்ட புதிய கல்விக் கொள்கையின் படி, மீண்டும் 5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அப்பரிந்துரையின் அடிப்படையில் தமிழக அரசும் 5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வினை நடத்த முடிவெடுத்துள்ளது.
இப்பொதுத்தேர்வின் மூலம் கிராமப்புற மாணவர்களின் இடைநிற்றல் சதவிகிதம் அதிகரிப்பதோடு, குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை உயரும் அபாயத்தினை தமிழக அரசு புரிந்துகொள்ள வேண்டும். கல்வி என்பது மதிப்பெண் பெறுவது மட்டுமே அல்லாமல், இளம் பருவத்தினருக்கான வாழ்க்கையினை நெறிப்படுத்துவதும் – முறைப்படுத்துவதுமாக இருக்க வேண்டும். இதனைக் கருத்தில்கொண்டு, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவினை தமிழக அரசு கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.