• முன்னாள் அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்களுக்கு டாக்டர் பாரிவேந்தர் எம்.பி., வாழ்த்து

    திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கும் முன்னாள் அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள், கட்சியின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக திருச்சி மாவட்ட திமுக செயலாளராக திரு.கே.என்.நேரு அவர்கள் திறம்பட செயலாற்றி வருகின்றார். 1986-ஆம் ஆண்டு புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராகவும், 1989-ஆம் ஆண்டு லால்குடி சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு அப்போதைய திமுக ஆட்சியில் டாக்டர் கலைஞர் அவர்களின் தலைமையிலான அமைச்சரவையில் முதன் முதலாக அமைச்சராக பொறுப்பு வகித்தார். பின்னர் 1996, 2006-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற திமுக ஆட்சிக்காலங்களிலும் அமைச்சராக பொறுப்பு வகித்து சிறப்பான முறையில் செயலாற்றி உள்ளார்.

    லால்குடி, திருச்சி மேற்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் உறுப்பினராக பதவி வகித்த காலங்களில் அத்தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி மக்களின் அன்பைப் பெற்றுள்ளார்.

    சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் திருச்சி மாவட்டத்திலுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களிலும், ஒரு மாவட்ட ஊராட்சியிலும் திமுக மகத்தான வெற்றி பெற முழு முதற் காரணமாக இருந்துள்ள திரு.கே.என்.நேரு அவர்கள், "திமுக முதன்மை செயலாளர்" என்கிற பொறுப்பினை பெற்றமைக்கு என் இதயமார்ந்த நல்வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.