-
மக்கள் கருத்துக்களைக் கேட்காமல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது - மத்திய அரசுக்கு டாக்டர் பாரிவேந்தர் M.P., கோரிக்கை
தஞ்சை – புதுக்கோட்டை – நாகை உள்ளிட்ட ‘டெல்டா’ மாவட்டங்களில் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் எடுக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை, தொடக்கம் முதலே பல்வேறு அரசியல் கட்சிகளும் - தன்னார்வ அமைப்புகளும் எதிர்த்து வந்துள்ளன. அப்பொழுதெல்லாம் மக்களின் கருத்துக்கு எதிராக மத்திய அரசோ – மாநில அரசோ இத்திட்டங்களை செயல்படுத்தாது என அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது. போராட்டங்கள் தொடங்கி உச்ச நிலைக்குச் செல்வதும், அரசு பேச்சுவார்த்தை நடத்தி வாக்குறுதி கொடுத்தபின் போராட்டங்களை விலக்கிக்கொள்வதும தொடர்கதையாக நடந்துவந்துள்ளது.
தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று கூறப்படும் காவிரி டெல்டா பகுதியின் விவசாயத்தை அழித்துவிட்டு, ஹைட்ரோகார்பன் திட்டங்களை செயல்படுத்துவது என்பது, கண்களை விற்று சித்திரம் வாங்குவதற்கு ஒப்பாகும். ஏனெனில், இம்மாதம் 16-ஆம் தேதி (16.01.2020) மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில் இதுவரை எண்ணெய், இயற்கை எரிவாயு மேம்பாடு மற்றும் உற்பத்தி வகைகள் ‘A’ என்ற பிரிவின் கீழ் இருந்ததை, ‘B 2’ என்ற பிரிவுக்கு மாற்றியுள்ளதாக தெரிகிறது.
இம்மாற்றத்தின் மூலம் சம்பந்தப்பட்ட பகுதி மக்களின் கருத்தை கேட்காமலேயே உரிமம் பெற்ற எண்ணெய் நிறுவனங்கள் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய்யினை எடுத்துக்கொள்வதற்கு வழிவகுக்கிறது. இது முற்றிலும் ஜனநாயக விரோதமானது என்பது மட்டுமல்லாமல், அப்பகுதி மக்களின் கடுமையான எதிர்ப்புகளுக்கிடையே, இத்திட்டத்தை நிறைவேற்றியே ஆகவேண்டும் என்ற அரசின் தீவிரத்தன்மையை காட்டுவதாகவும் அமைந்துவிடும்.
இத்திட்டத்தை செயல்படுத்துவதாக இருந்தாலும்கூட, மக்களின் ஒத்துழைப்போடும் – அவர்களின் ஒருமித்த ஆதரவோடும்தான் செயல்படுத்தவேண்டுமே ஒழிய, மக்களின் கருத்துக்களை கேட்காமல் செயல்படுத்தக்கூடாது. எனவே, ஏற்கனவே இருந்தவாறே இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் உற்பத்தி செய்வதற்கான வரைமுறைகளை, A பிரிவிலேயே தொடர மறு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொள்கின்றேன்.