• துறையூர் அருகே வாகன விபத்தில் உயிரிழந்த, ​விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து - டாக்டர் பாரிவேந்தர் M.P அறிவிப்பு

  துறையூர் அருகே வாகன விபத்தில் உயிரிழந்த

  • எட்டுபேர் குடும்பத்தினருக்கு ரூபாய் ஒரு லட்சம் நிதி உதவி. 
  • பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவசக் கல்வி.
  • காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு

         SRM மருத்துவமனையில் இலவச சிகிச்சை.

  விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து

  -   டாக்டர் பாரிவேந்தர் M.P அறிவிப்பு -

  திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் பேருர்  கிராமத்தைச் சார்ந்த 17 பேர் 18.08.2019 அன்று சிறுநாவலூர் அருகே SN புதூர் கிராமத்தில் நடைபெறும்  திருவிழாவில் கலந்துகொள்ள தனியார் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்பொழுது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் திடீரென  சாலை ஓரத்தில் இருந்த கிணற்றில்  குப்புற விழுந்ததில் எட்டு பேர் மரணமடைந்தும்,  ஒன்பது பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவருவதும், தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இக்கொடூரமான சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக, பெரம்பலூர் நாடாளுமன்ற  உறுப்பினரும் இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனருமாகிய டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் நேற்று (19.08.2019) அப்பகுதிக்குச் சென்றிருந்தார்.

  முதலில், துறையூர் அருகே உள்ள பேரூர் கிராமத்தைச் சேர்ந்த குணசீலன்,  குமாரத்தி, கோமதி, கயல்விழி, சிறுமி யமுனா, சிறுவன் சரண் ஆகியோரின் குடும்பத்தினரையும், இதனையடுத்து உப்பிலியாபுரம் அருகேயுள்ள கட்டப்பள்ளி கிராமத்தைச் சார்ந்த சிறுமி சஞ்சனா, எழிலரசி ஆகியோரின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

  விபத்தில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினரை சந்தித்து, அவர்களின் துயரத்தில் பங்கேற்ற டாக்டர் பாரிவேந்தர் அவர்கள், உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் ரூபாய் ஒரு லட்சம் நிதி உதவி அளித்தார். தமிழக அரசு ரூபாய் இரண்டு லட்சம் நிதி உதவி அளித்ததை குறிப்பிட்டு அதனை வரவேற்ற டாக்டர் பாரிவேந்தர் அவர்கள், தான் வழங்குகின்ற ஒரு லட்சம் ரூபாயும் இக்குடும்பத்தினருக்கு ஒரு ஆறுதலை அளிக்கும் எனக்கூறினார்.

  மேலும், விபத்தில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினரில் யாராவது படித்துக்கொண்டிருந்தால், அவர்களின் படிப்பு செலவு முழுவதையும் தான் ஏற்றுக்கொள்வதாக கூறினார். இதேபோல், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள், மேல்சிகிச்சை தேவைப்படும் எனக் கருதினால் அவர்களுக்கு எஸ்ஆர்.எம் மருத்துவமனையில் இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

  இதனைக்கேட்டு நெகிழ்ச்சியடைந்த அக்குடும்பத்தினர், டாக்டர் பாரிவேந்தர் அவர்களுக்கு தங்களுடைய நன்றியினை தெரிவித்தனர். “எங்கள் தொகுதியின் M.P ஆகிய நீங்கள், இச்சோதனையான சமயத்தில் அளித்த நிதி உதவியும், கல்விச்சலுகையும், மருத்துவ உதவியும் பெரும் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது” என்றனர்.

  விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியபோது, ஐஜேகே தலைவர் உயர்திரு ரவி பச்சமுத்து அவர்களும், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஸ்டாலின் குமார் அவர்களும், ஐஜேகே பொதுச்செயலாளர் திரு.பி.ஜெயசீலன் அவர்களும் மற்றும் திமுக – ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளின் மாநில – மாவட்ட – ஒன்றிய – நகர பொறுப்பாளர்களும் உடன் சென்றிருந்தனர்.