-
காவிரி – வைகை – குண்டாறு திட்டத்திற்கு நிதி ஒதுக்கக்கோரி மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் அவர்களை நேரில் சந்தித்து டாக்டர் பாரிவேந்தர் M.P வலியுறுத்தல்
மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் அவர்கள் கடந்த 5-ம் தேதி நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்தார். நீண்டநாள் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற தமிழகத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கக் கோரி,இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும், பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் மத்திய நிதியமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
நேற்று (09-07-2019) டெல்லியில் உள்ள மத்திய நிதியமைச்சக அலுவலகத்தில்,திருமதி நிர்மலா சீத்தாராமன் அவர்களை சந்தித்த டாக்டர் பாரிவேந்தர் அவர்கள், ‘இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சர் என்கிற முறையிலும், தமிழகத்தைச் சேர்ந்தவர் என்கிற முறையிலும் இந்தியாவிற்கும் – தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளீர்கள், அதற்காக என் வாழ்த்துக்கள்’ எனக் கூறினார். மத்திய நிதியமைச்சரும் தன் நன்றியினை பரிமாறிக்கொண்டார்.
பின்னர், மத்திய நிதியமைச்சரிடம் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் முக்கியமான ஒரு கோரிக்கையினை வைத்தார். “காவேரி – வைகை – குண்டாறு இணைப்புத்திட்டம் நீண்ட நாட்களாக போதிய நிதி ஒதுக்கப்படாமல் செயலற்று கிடக்கின்றது. ஆறு மாவட்டங்களின் விவசாயத் தேவையினையும், 50 லட்சத்திற்கும் அதிகமான மக்களின் குடிநீர் பிரச்சனையினையும் தீர்க்கக்கூடிய திட்டம் இது. எனவே, இத்திட்டத்தினை விரைந்து நிறைவேற்ற போதிய நிதி ஒதுக்கவேண்டும்” என வலியுறுத்தினார். இக்கோரிக்கையினை அவசியம் பரிசீலிப்பதாகவும் – திட்டம் நிறைவேற அனைத்து சாத்தியக்கூறுகளும் ஆராயப்படும்" என திருமதி நிர்மலா சீத்தாராமன் அவர்கள் கூறினார்.