-
இந்தியாவின் தொழில் மற்றும் சேவை துறைகளின் வளர்ச்சியினைக் கருத்தில் கொண்டுள்ள பட்ஜெட்’ - மத்திய நிதிநிலை அறிக்கை குறித்து டாக்டர் பாரிவேந்தர் MP கருத்து
கடந்த பிப்ரவரி மாதம் மத்திய நிதியமைச்சராக பொறுப்பு வகித்த திரு.பியூஸ்கோயல் அவர்கள் தாக்கல் செய்த இடைக்கால நிதிநிலை அறிக்கையின் தொடர்ச்சியாக, இன்று(05.07.2019) மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் இவ்வாண்டிற்கான முழுமையான நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்துள்ளார்.
நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள், பட்ஜெட் உரையின்போது மிகச்சிறப்பாக புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டியிருந்தார். “காய்நெல் அறுத்து கவளம் கொளினே” என்கிற பிசிராந்தையாரின் புறநானூற்றுப்பாடலில், ‘யானை புக்கபுலம்போல’ அல்லாமல் மக்களிடம் இருந்து அரசு வரிவசூல் செய்யவேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ள கருத்தே மத்திய பாஜக அரசின் கருத்தாக இருந்தால், அவர்களை பாராட்டுவதில் எந்த தயக்கமும் இல்லை.
இந்த நிதிநிலை அறிக்கையில், 2022 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் - உள்நாட்டு நீர்வழிச்சாலை அமைக்கப்படும் - முத்ரா வங்கி மூலம் பெண்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்கப்படும் என்பது போன்ற திட்டங்களை வரவேற்கின்றோம்.
ஒரு மாநிலம் மின்மிகை மாநிலமாகவும், இன்னொரு மாநிலம் மின்பற்றாக்குறை மாநிலமாகவும் இருக்கின்ற நிலையினை மாற்ற, சம அளவிலான மின் பயன்பாட்டினை கொண்டுவரும் வகையில், ‘ஒரே நாடு - ஒரே மின் விநியோகம்’ என்கிற திட்டமும்,சுற்றுச்சூழல் மாசினை குறைக்கும் வகையில், மின்சார வாகனங்களுக்கு ரூபாய் 1.50 லட்சம் வருமான வரி விலக்கு அளிப்பதோடு - வங்கிக்கடன் வட்டியும் தள்ளுபடி செய்யப்படும் என்கிற திட்டமும் - டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிப்பதில்லை என்கிற அறிவிப்பும் தொலைநோக்கு பார்வையுடன் கொண்டுவரப்பட்டுள்ள அம்சங்களாகும்.
தொடர்ந்து, பெட்ரோல் - டீசல் ஆகியவற்றின் விலை உயர்ந்துவரும் நிலையில்,சாலை உள்ளிட்ட கட்டமைப்புப் பணிகளுக்காக லிட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாய் கூடுதல் வரி விதிக்கப்படும் என்பதை தவிர்த்திருக்கலாம். பொதுவாக, தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் இந்தியாவின் தொழில் மற்றும் சேவை சார்ந்த துறைகளின் வளர்ச்சியினைக் கருத்தில்கொண்டு போடப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையாகவே இதனைக் கருதுகின்றோம்.