• “தமிழர்களின் ஆட்சி நிர்வாகம் மற்றும் கலை, பண்பாட்டின் அடையாளமாகத் திகழ்ந்தவர் மாமன்னர் ராஜராஜசோழன்” . ராஜராஜசோழன் குறித்த அவதூறு செய்திகளுக்கு டாக்டர் பாரிவேந்தர் M.P. விளக்கம்

  சோழப்பேரரசின் மாமன்னராக விளங்கிய ராஜராஜசோழன் எந்தவொரு  குலத்திற்கோ, மதத்திற்கோ எதிரானவர் அல்ல. பல்வேறு சமுதாய அமைப்புகள் அவரைச் சொந்தம் கொண்டாடினாலும், ராஜராஜசோழனின் பிறப்பின் அடிப்படையில் அவர் பார்க்கவ குலத்திற்கு உரியவர் என பல்வேறு இலக்கிய கல்வெட்டுச் சான்றுகள் கூறுகின்றன. அதனடிப்படையில் அவர் பார்க்கவ குலத்திற்கு சொந்தமானவராக விளங்கினாலும், குறுகிய வட்டத்திற்குள் அவரை அடைக்கமுடியாது. ஏனெனில், விரிந்து பரந்த பேரரசை உருவாக்கி அதனை ஆட்சி புரிந்தவர் ராஜராஜசோழன்.

  தன்னுடைய ஆட்சிக்காலத்தில் அதுவரை தமிழகத்தில் இல்லாத அளவிற்கு அல்லது யாரும் அதற்குமுன் முயன்றிடாத அளவிற்கு நீர் மேலாண்மையில் முக்கிய கவனம் செலுத்தியவர் மாமன்னர் ராஜராஜன். இதன்மூலம் விவசாயம் செழித்தோங்கியதோடு மக்கள் அனைவரும் அமைதியான, வளமான வாழ்க்கை முறையினை மேற்கொள்ள வழிவகுத்தார். அண்டை நாடுகளை வணிக ரீதியாக தமிழகத்துடன் இணைத்த பெருமையும் அவரையே சாரும். தன் நாட்டின் எல்லைப்புறங்களில் வலிமையான பாதுகாப்பு அரண்களை ஏற்படுத்தி, அந்நிய படையெடுப்பினால் மக்களுக்கு எந்தவித அச்சமும் ஏற்படாத வகையில் ஒரு அமைதிச் சூழ்நிலையை உருவாக்கினார்.

  பிறப்பின் அடிப்படையிலான சாதிய பாகுபாடுகளுக்கு முக்கியத்துவம் தராமல் அவர்களின் தொழில் சார்ந்த திறமைக்கு முன்னுரிமை வழங்கியவர். இதனால்தான் அவரின் பேரரசில் கட்டிடக்கலையும் – சிற்பக்கலையும் – வேளான்மையும் -  நிர்வாகக் கட்டமைப்புகளும் மேலோங்கியிருந்தது. 

  யாருக்கோ சொந்தமான நிலங்களை அபகரித்தார் என்று அவர் மீது அபாண்டமான, கற்பனையான குற்றச்சாட்டினை எந்தவிதமான வரலாற்றுத் தரவுகளும் இல்லாமல் ஒரு இயக்குநர் பேசி அது சர்ச்சைக்குள்ளாகி இருக்கின்றது.

  மாமன்னர் ராஜராஜ சோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி செய்தபோது, இப்பொழுது இருக்கின்ற ஜனநாயக மரபோ, அல்லது முதலாளித்துவ அமைப்போ அப்போது இருந்திருக்கவில்லை. குடிமக்களின் நிலவுடமைச் சமுதாயம் மாத்திரம் நடைமுறையில் இருந்த காலத்தை தற்போதைய நவீன ஜனநாயக அமைப்புடன் ஒப்பிட்டுப் பேசுவது என்பது வடிகட்டிய அறியாமையின் உச்சம் எனறுதான் கொள்ளவேண்டும்.

  கடந்த காலங்களுக்குரியதான வரலாற்றினை, அந்த காலங்களில் நிலவிய சமூக ஆட்சி முறைகளோடும், பிற நாடுகளில் அப்பொழுது நிலவிய சமூக ஆட்சி முறைகளோடும் ஒப்பிட்டு, எது மேலான ஆட்சிமுறை என்று ஆய்வு செய்வதுதான் அறிவுடையவர்கள் செய்வது. ஆனால் பொத்தாம்பொதுவாக எந்தவிதமான வரலாற்றுப் புரிதலும் இல்லாமல் ஏதோவொரு உள்நோக்கத்தோடும், காழ்ப்புணர்வோடும் இதுபோன்ற கருத்துக்களைப் பேசுவது தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ள உதவுமே ஒழிய, மாமன்னர் ராஜராஜனின் புகழிற்கு களங்கத்தினை ஏற்படுத்திவிட முடியாது.

  எந்தவொரு தனி நபரின் நிலத்தையும் அபகரிக்காமல் அவர்களையும், குறுநில அரசுகளையும் ஒருங்கிணைத்து, ஒரு மைய அதிகாரத்தை உருவாக்கியவர் ராஜராஜசோழன். அதைப்போலவே, தொன்மையான பழங்குடி வழக்கங்களையும் ஒருங்கிணைத்து அதைப் பெரும் சமயமாக மாற்றி, ஆலய வழிபாடுகளின் மூலம் கலாச்சார இணைப்பிற்கு பாலமாக இருந்தவர். இதற்கு தஞ்சையில் உயர்ந்து நிற்கும் பெருவுடையார் திருக்கோயிலின் கட்டிடக்கலையும், பொறியியல் நுட்பமுமே உதாரணம்.

  மைய அதிகாரத்தை கடைக்கோடி கிராமங்கள் வரையில் கொண்டு சேர்ப்பதற்கான நிர்வாக அமைப்பு முறைகளை ஏற்படுத்தி, வரிவசூலுக்காக சோழ பேரரசை மண்டலம் – கோட்டம் – வளநாடு என பல பகுதிகளாக பிரித்து புதியதொரு ஆட்சி முறையினை ஏற்படுத்தியவர். மாமன்னர் ராஜராஜனின் முக்கிய சாதனையே இந்த வட்டார நிர்வாக அமைப்புகள்தான்.

  பரந்து விரிந்த ஜனநாயகப் பார்வையை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கொண்டிருந்த மாபெரும் தமிழ் மன்னனை, தரம் தாழ்ந்து விமர்சிப்பதை தமிழ்ச்சமுதாயம் ஏற்றுக்கொள்ளாது. மாமன்னர் ராஜராஜனைப்பற்றி மீண்டும் இதுபோன்ற அவதூறு பேச்சுக்களை யாரேனும் தொடர்வார்களேயானால், அவர்கள்  கடுமையான விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என எச்சரிக்கின்றோம்.