-
‘நீட்’ தேர்வு மையங்களை ஒதுக்குவதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை நிவர்த்திசெய்ய வேண்டும் - தேசிய தேர்வு முகமைக்கு டாக்டர் பாரிவேந்தர் வலியுறுத்தல்
இந்த ஆண்டிற்கான ‘நீட்’ தேர்வு, மே மாதம் 5-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நாடு முழுவதும் சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களும், தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமர்ன மாணவர்களும் தேர்வு எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான நுழைவுச்சீட்டுக்கள் (Hall Ticket)இம்மாதம் 15-ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை – கோவை – திருச்சி – திருநெல்வேலி உள்ளிட்ட 14 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும், மாணவர்கள் விரும்பிக் கேட்டுள்ள மையங்களுக்குப் பதிலாக வேறு வேறு மையங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலும், தேர்வு மையங்களின் பெயரும், அவற்றிற்கான எண்ணும் வேறுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தபோதும், முறையான பதில் வருவதில்லை என பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த ஆண்டைப்போலவே தேர்வு மையங்கள் ஒதுக்குவதில், இந்த ஆண்டிலும் குளறுபடிகள் ஏற்படுமோ என எண்ணத்தோன்றுகிறது. எனவே தொடக்க நிலையிலேயே இதுபோன்ற குளறுபடிகளை நிவர்த்தி செய்து, மாணவர்களுக்கு எந்தவிதமான பதட்டமும் இல்லாத வகையில் ‘நீட்’ தேர்வினை எழுத, தேசிய தேர்வு முகமை நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்துகின்றேன்.