-
“இந்தியத் திருநாட்டின் வீரமகனாக தாயகம் திரும்புகிறார் அபிநந்தன்” - விங் கமாண்டர் அபிநந்தன் விடுதலைக்கு டாக்டர் பாரிவேந்தர் வரவேற்பு
கடந்த 14-ஆம் தேதி, புல்வாமாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத்தாக்குதலில் 40 இந்திய துணை ராணுவப் படையினர் வீர மரணம் அடைந்தனர். இச்செயலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் முகாம்களை அழித்தொழிக்கும் பொருட்டு 26-ம் தேதி இந்திய விமானப்படையினர் அதிரடித் தாக்குதல் நடத்தினர்.
இதன் எதிரொலியாக பாகிஸ்தான் போர் விமானங்கள் காஷ்மீர் பகுதிகளுக்குள் ஊடுறுவி வந்தனர். அவற்றை இந்திய விமானப் படையினர் வெற்றிகரமாக விரட்டியடித்து பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்தனர். இந்த நடவடிக்கையின் போது எதிர்பாராதவிதமாக போர் விமானம் ஒன்று பாகிஸ்தான் எல்லையில் தனது கட்டுப்பாட்டை இழந்து விழுந்தது. இந்த ராணுவ விமானத்தில் இருந்த விங் கமாண்டர் திரு.அபிநந்தன் அவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டார்.
அவர் பாகிஸ்தான் ராணுவத்தினரின் கொடூரத்தாக்குதலுக்கு உள்ளாகும் வீடியோ வெளியிடப்பட்டது. அதனைக்கண்டு 130 கோடி இந்தியர்களின் மனமும் துடித்தது. அவரின் விடுதலைக்காக இந்திய அரசு மிகப்பெரும் முயற்சிகளை மேற்கொண்டது. அமெரிக்கா,பிரான்ஸ், ரஷ்யா, கனடா ஆகிய நாடுகளும் திரு.அபிநந்தன் அவர்களின் விடுதலைக்காக பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்தது.ஜெனிவா ஒப்பந்தத்தின்படி ஒரு போர்க்கைதியை நடத்தக்கூடிய விதிமுறைகளை முற்றிலுமாகப் புறந்தள்ளிவிட்டு திரு.அபிநந்தன் கொடூரமாக நடத்தப்பட்டிருக்கிறார்.
இதனைக் கண்டித்து, இந்தியா மிகப்பெரும் அளவில் பாகிஸ்தானிற்கு நெருக்கடியைக் கொடுத்தது. வேறு வழியின்றி பாகிஸ்தான் அரசு இன்று (01.03.2019) திரு.அபிநந்தன் அவர்களை விடுதலை செய்து இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளின் விசாரணையின்போது வெளிப்படுத்திய நெஞ்சுரம் மிக்க பதில்களால், நம் அனைவரையும் பெருமைகொள்ள வைத்து, இந்தியத் திருநாட்டின் வீரமகனாக தாயகம் திரும்பும் திரு.அபிநந்தன் அவர்களை வருக வருகவென்று இதயப்பூர்வமாக வரவேற்கின்றோம்.