• தீவிரவாத முகாம்கள் மீது நடத்திய தாக்குதல் மூலம் இந்தியாவின் ராணுவ பலம் நிரூபிக்கப்பட்டுள்ளது - மத்திய அரசுக்கு டாக்டர் பாரிவேந்தர் பாராட்டு

    பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-எ-முகம்மது தீவிரவாத அமைப்பினர்  கடந்த 14-ஆம் தேதி, இந்திய துணை ராணுவத்தினர் மீது நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இக்கொடூரச் சம்பவம் இந்தியர்களை மாத்திரமல்லாமல், மனிதாபிமானமிக்க உலக மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    இச்சம்பவத்திற்குக் காரணமாக இருந்த ஜெய்ஷ்–எ-முகம்மது தீவிரவாத அமைப்பின் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அப்பொழுதே சூளுரைத்திருந்தார். அதனை நிறைவேற்றும் வகையிலும்,ஒட்டுமொத்த இந்தியர்களின் மனக் காயங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையிலும் இன்று (26.02.2019) அதிகாலை 3.30மணியளவில் இந்திய ராணுவத்தினரால் துல்லியத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  

    இதில்,  ஜெய்ஷ்–எ-முகம்மது, லஷ்கர்-எ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன்  ஆகிய பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டுள்ளன. பாலாபோட், சக்கோரி, முஸாபராபாத் ஆகிய இடங்களிலுள்ள, அவர்களின்கட்டுப்பாட்டு அறைகளும்  தகர்க்கப்பட்டுள்ளன.  மொத்தம்   பன்னிரண்டு மிராஜ் விமானங்களுடன், பத்தொன்பது நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இத்தாக்குதல் 100 சதவிகிதம் வெற்றியடைந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் ராணுவ பலம் பாகிஸ்தானிற்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.

    இனிவரும் காலங்களிலாவது, பாகிஸ்தான் தீவிவாத போக்கினைக் கைவிட்டு, தன் தவறுகளைத் திருத்திக்கொள்ளும் என எதிபார்க்கின்றோம். கடந்த 12 நாட்களாக இந்தியர்களின் மனத்துயருக்கு  காரணமாக இருந்த பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளை அழித்தொழித்த இந்திய ராணுவத்திற்கும் மத்திய அரசுக்கும் என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.