-
1 of 4,427 திராவிட இயக்கத் தலைவர் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் மணிமண்டபம் கட்ட அறிவிப்பு - தமிழக முதல்வருக்கு டாக்டர் பாரிவேந்தர் நன்றி
திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும், தந்தை பெரியார் அவர்களுடன் சுயமரியாதை இயக்கத்தில் தீவிரமாக இணைந்து பணியாற்றியவருமான சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களுக்கு திருச்சியில் ரூபாய் 50 லட்சம் செலவில் மணிமண்டபம் கட்டப்படும் என மாண்புமிகு தமிழக முதல்வர்திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார். இவ்வறிவிப்பினை உலகமெங்கும் வாழும் ஒரு கோடிக்கும் மேலான பார்க்கவகுல சமுதாய மக்களின் சார்பில் வரவேற்றுப் பாராட்டுகின்றேன்.
சர் ஏ.டி பன்னீர்செல்வம் அவர்கள் 1888-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதி தற்போதைய திருவாரூர் மாவட்டத்திலுள்ள பெரும்பண்ணையூர் என்கிற கிராமத்தில் பிறந்தார். இங்கிலாந்தில் ‘பார் அட் லா’ சட்டப்படிப்பை முடித்தபின், திராவிட இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு அரசியல் பணியாற்றினார். 1930-ஆம் ஆண்டு முதல் 1939–ஆம் ஆண்டு வரை சென்னை மாகாணத்தின் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். அதே காலகட்டத்தில் 1937-ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் நிதி மற்றும் உள்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். இரண்டாம் உலகப்போரின் போது ஆங்கிலேய அரசின் இந்திய ஆலோசகராக திரு.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள் நியமிக்கப்பட்டார்.
இங்கிலாந்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, 1940-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1-ஆம் தேதி லண்டனுக்கு அரசுமுறைப் பயணமாக சென்றார். அப்பொழுது ஓமன் தீபகற்பத்தின் அருகே ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தார். அவரின் மறைவு திராவிட இயக்கத்திற்கும் - தமிழர் நலனுக்கும் பெரும் இழப்பு என பல்வேறு தலைவர்களாலும் அப்போது நினைவு கூரப்பட்டது.
அத்தகைய சிறப்பு வாய்ந்த சர்.எ.டி பன்னீர்செல்வம் அவர்களுக்கு மணிமண்டபம் கட்டவேண்டும் என, பார்க்கவ குல முன்னேற்ற சங்கத்தின் ஆட்சிமன்றக்குழுச் செயலாளர் திரு. பி.ஜெயசீலன் அவர்களின் தலைமையில், சங்கத்தின் தலைவர்
திரு. ஆர். சத்தியநாதன், பொதுச்செயலாளர் திரு.எஸ்.எஸ்.வெங்கடேசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மூலம் கோரிக்கை மனு அளிக்க அறிவுருத்தினேன். அதன்படி, கடந்த 19.11.2018 அன்று தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து, பார்க்கவகுல முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இக்கோரிக்கை மனுவினை ஏற்று, இன்று (14.02.2019) சர். ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் என் இதயமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இம்மணிமண்டபம் அமைக்கப்படும் போது, தமிழக அரசுடன் பார்க்கவகுல முன்னேற்ற சங்கமும் உறுதுணையாக இருந்து செயல்படும் எனவும் தெரிவித்துக்கொள்கின்றேன்.